மணிப்பூரில் தீவிரவாத தாக்குதல் – 11 பேர் உயிரிழப்பு; 10 பேர் காயம்

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் கமென்லாக் கிராமத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர், 10 பேர் காயம் அடைந்தனர்.

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி இனத்தவர் 60 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் சமவெளி பகுதிகளில் வசிக்கின்றனர். குகி மற்றும் நாகா பழங்குடியினர் 40 சதவீதம் பேர் உள்ளனர். மலைப் பகுதிகளில் மைதேயி இனத்தவர் சொத்துகள் வாங்க அனுமதியில்லை. அரசின் சலுகைகள் மற்றும் இடஒதுக்கீட்டை பெறுவதற்காக தங்களுக்கும் பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என மைதேயி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பும்படி, மாநில அரசுக்கு மணிப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பழங்குடியினத்தவர் மணிப்பூரில் கடந்த மே 3-ம் தேதி ஒற்றுமை பேரணி நடத்தினர். இதில் மைதேயி – குகி இனத்தவர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. வீடுகள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த தொடர் வன்முறையில் 100 பேர் உயிரிழந்தனர்.

மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்கு 11 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலம் முழுவதும் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மைதேயி மக்கள் அதிகம் வசிக்கும் கிழக்கு இம்பால் மாவட்டம், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் காங்போகி மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள கமென்லாக் கிராமத்தில் குகி தீவிரவாதிகள் நேற்று முன்தினம் இரவு நவீன ஆயுதங்கள், கையெறி குண்டுகளுடன் நுழைந்து, கிராமத்தினர் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

குண்டு வீச்சு சத்தம் கேட்டதும் கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். அவர்கள் மீது குகி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த பயங்கர தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர், 10 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் இம்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விஷ்ணுபூர் மாவட்டத்தில் குகி தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நேற்று முன்தினம் துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது தீவிரவாதிகள் பதுங்கு குழிகளில் பதுங்கி தப்பினர்.

கமென்லாக் பகுதியில் குகி பழங்குடியின தீவிரவாதிகளுக்கும், மைதேயி இனத்தவருக்கும் அடிக்கடி மோதல் நடக்கிறது. கடந்த சில நாட்களில் இங்கு பலர் கொல்லப்பட்டனர். இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களில் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது. இது தற்போது காலை 5 மணி முதல் காலை 9 மணி என குறைக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.