மூன்று பிரதான ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பதால் செந்தில்பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் பரிந்துரை

சென்னை: அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் நேற்று அதிகாலை 2 மணியளவில் கைதுசெய்தனர். அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, சென்னைஅண்ணா சாலையில் உள்ள அரசுபன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த அமைச்சர்கள் உதயநிதிஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொன்முடி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர். மேலும், கட்சி நிர்வாகிகளும் மருத்துவமனையில் குவியத் தொடங்கியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை வளாகம் மற்றும் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டிருந்த அறையின் நுழைவுவாயிலில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மற்றும் விரைவு அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டனர்.

அதேபோல, மருத்துவமனையின் நுழைவு வாயிலில் தமிழக போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, செந்தில்பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை உறுதிசெய்த மருத்துவக் குழுவினர், அவரின் இதய ரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளைக் கண்டறிய அவருக்குஆஞ்சியோகிராம் பரிசோதனையை செய்தனர். இதில், 3 பிரதான ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

இதையடுத்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இதய சிகிச்சை நிபுணர்கள் 4பேர் வந்து, அவரதுஉடல் நிலை, அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர், அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர்.

முன்னதாக, மருத்துவமனைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்தார். இதேபோல, முதல்வரின் மருமகன் சபரீசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் நலம் விசாரித்தனர். செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா மருத்துவமனைக்கு வந்தார். கணவரை நேரில் பார்த்த அவர், கண்கலங்கினார்.

இதற்கிடையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை அனுமதித்து, இதய அறுவை சிகிச்சை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.