ஹைதராபாத், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில், அரசு நடத்தும், ‘நிம்ஸ்’ எனப்படும் நிஜாம் மருத்துவ அறிவியல் மையத்தில், 2,000 படுக்கை வசதிகள் உள்ள புதிய கட்டடப் பிரிவுக்கு, அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அடிக்கல் நாட்டினார்.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், பாரத் ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.
இம்மாநிலத் தலைநகர் ஹைதராபாதில், அரசு நடத்தும் நிஜாம் மருத்துவ அறிவியல் மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு ஏற்கனவே, 2,000 படுக்கை வசதிகள் உள்ளன. இந்நிலையில், மேலும் 2,000 படுக்கை வசதிகள் உள்ள கட்டடப் பிரிவுக்கு, முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று அடிக்கல் நாட்டினார்.
அப்போது, முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியதாவது:
கடந்த 2014ல், தெலுங்கானா உருவான போது, மாநில பட்ஜெட்டில், சுகாதாரத் துறைக்கு, 2,100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இது, 2023 – 24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், 12 ஆயிரத்து 360 கோடி ரூபாயாக அதிகரித்துஉள்ளது.
இதன் வாயிலாக, சுகாதாரத் துறைக்கு மாநில அரசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது தெரிய வருகிறது.
எதிர் காலத்தில், கொரோனா போன்ற தீவிர தொற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், சுகாதார உட்கட்டமைப்பு வலுவாக இருந்தால், உயிரிழப்பு குறைவாக இருக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, எந்த அவசரநிலை வந்தாலும் அதை திறம்பட எதிர்கொள்ளும் வகையில், பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கி உத்தரவிட்டேன்.
அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் பொது மக்களுக்கு, டாக்டர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.1,571 கோடியில் புதிய கட்டடம்
புதிதாக கட்டப்பட உள்ள கட்டடம், 32 ஏக்கர் பரப்பளவில், 23,96,542 சதுரடியில் அமைய உள்ளது. இங்கு, ‘ஏ, பி, சி, டி’ என நான்கு பிளாக்குகள் கட்டப்பட உள்ளன. இதில், ஏ பிளாக்கில் வெளி நோயாளிகளுக்கும், பி மற்றும் டி பிளாக்குகளில், உள் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. சி பிளாக்கில், அவசர சிகிச்சை பிரிவாக செயல்பட உள்ளது. 1,571 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ள இந்த கட்டடத்தில், 32 நவீன ஆப்பரேஷன் தியேட்டர்கள் அமைய உள்ளன. இதன் வாயிலாக, நிஜாம் மருத்துவ அறிவியல் கழகத்தில் உள்ள படுக்கை வசதிகளின் எண்ணிக்கை, 4,000 ஆக அதிகரிக்க உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்