அமைச்சர் செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது. இது குறித்து அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் `இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, “அமலாக்கத் துறையின் விசாரணைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஆவணங்களில் கையெப்பமிட மறுத்துவிட்டார். அதிகாரிகளிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார். இதனால்தான் அவரைக் கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரைக் கைது செய்யப் போகிறோம் என்று கூறியதும், தரையில் புரண்டு நெஞ்சு வலிப்பதாகக் கூறி கதறி அழத்தொடங்கிவிட்டார். காரில் படுத்துக் கொண்டும் அழுதார்.இதனால் வேறு வழியின்றி மருத்துவமனைக்கு கொண்டுசென்றோம்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள்,ரத்த அழுத்தம் உள்ளதாக தெரிவித்தனர். பின்னர், மாவட்ட முதன்மை நீதிபதிக்கு வேண்டுகோள் விடுத்து, அவரை நேரில் மருத்துவமனைக்கே அழைத்து வந்து, ரிமாண்ட் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சட்ட விதிகளுக்கு உட்பட்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்றார்.