புதுடெல்லி: நாடு முழுமைக்கும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள் தம் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று 22வது சட்ட ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களின் போது பாஜக தேர்தல் அறிக்கைகளில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கம், அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவது மற்றும் பொது சிவில் சட்டம் ஆகியவை இடம்பெற்றன. இவற்றில் பொது சிவில் சட்டம் மட்டுமே தற்போது பாக்கி உள்ளது. இதையும் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பு அமல்படுத்த அல்லது அதற்கான முயற்சிகளில் மத்தியில் உள்ள பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 22வது சட்ட கமிஷன் நேற்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள் கருத்துகள் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது.
ஏற்கெனவே கருத்துக் கேட்பு நடந்து 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் புதிதாக கருத்துகள் கேட்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் பொது சிவில் சட்டம் தொடர்பாக இந்த 3 ஆண்டுகள் இடைவெளியில் பல்வேறு நீதிமன்றங்களில் பல வழக்குகள் விசாரித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதனால் புதிதாக கருத்து கேட்கப்படுவது அவசியமாவதாக சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்துகளைத் தெரிவிக்க விரும்புபவர்கள் சட்ட ஆணையத்துக்கு அதன் உறுப்பினர் செயலரின் மின்னஞ்சல் முகவரிக்கு தனிப்பட்ட முறையிலோ அல்லது சட்ட ஆணைய இணையதளத்தில் அதற்கென கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிலோ தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, 30 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை membersecretary–[email protected] என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21வது சட்ட ஆணையம் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், நாட்டில் பொது சிவில் சட்டம் அவசியம் இல்லை. தற்போதைய சூழலில் அது விரும்பத்தக்கதும் அல்ல என்று தெரிவித்தது.
185 பக்கங்கள் கொண்ட அந்த ஆலோசனை அறிக்கையில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் நாட்டில் நிலவும் பன்முகத்தன்மைக்கு மதச்சார்பின்மை முரண்பட முடியாது. நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மை என்பதை பொது சிவில் சட்டம் மூலம் சமரசம் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அது தேசத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஆகிவிடும் என்று தெரிவித்திருந்தது. இருப்பினும் திருமணம், விவாகரத்து தொடர்பான சட்டங்கள் சிலவற்றை பொதுவானதாக பல்வேறு மதங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.