“தனியார் பால் கொள்முதல் என்பது பேராபத்து'' – அமைச்சர் மனோ தங்கராஜ்

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திருச்சி கொட்டப்பட்டு ஆவின் பால்பண்ணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் 776 பயணாளிகளுக்கு ரூ.4.24 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், “தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்களுக்கு அனைத்து சீசனிலும் நியாயமான, நிலையான விலையில் கொள்முதல் செய்து பால் உற்பத்தியை பெருக்குவதிலும், வாடிக்கையாளர்களுக்கு தரமான பால் மற்றும் பால் உற்பத்தி பொருள்களை ஆண்டு முழுவதும் விற்பனை செய்வதிலும் தலையாய கடமையாக கொண்டு ஆவின் செயல்பட்டு வருகிறது. நல்ல கட்டமைப்புடன் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகளை கடந்த காலங்களில் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டியிருக்கின்றனர். சமீப காலமாக பால் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

கடந்த ஒரு மாதத்தில் 27 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது 30 லட்சம் லிட்டராக அது உயர்ந்திருக்கிறது. இதை இன்னும் அதிகரிக்கும் விதமாக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம். நானும் ஆவின் மேலாண்மை இயக்குநரும் பல மாவட்டங்களுக்குச் சென்று பால் உற்பத்தியாளர்களை சந்தித்து, கடன் உதவிகளையும், திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். வருங்காலத்தில் மிகப்பெரிய அளவில் ஆவின் கட்டமைக்கப்படும். ஆவின் நிர்வாகத்தில் உள்ள பணியாளர்கள் பகிர்ந்து அளிக்கப்பட்ட முறை பற்றி தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். அத்தியாவசியமாக பணியாளர் தேவைப்படும் இடங்களுக்கு சில மாற்றங்களையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். பணியாளர்கள் பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்னை வெகு விரைவில் சீரமைக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “தனியார் பால் கொள்முதல் என சிலர் முளைத்திருக்கின்றனர். இது பேராபத்தானது. தனியார் பால் கொள்முதல் செய்பவர்கள் எவ்வித உரிமமும் பெறாமல் இருப்பதோடு, தரத்தையும் கடைபிடிக்கப்படுவதில்லை. அதனால் பாலில் கலப்படம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. பல இடங்களில் கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பால் உற்பத்தியாளர்கள் விவசாயிகள் கோரிக்கையை அரசுக்கு வைப்பதற்கு சகல உரிமையும் இருக்கிறது . அரசும் அந்த கோரிக்கையை கேட்டு பரிசீலித்து தேவையான நடவடிக்கை எடுக்கும். பால் விநியோகத்தில் உள்ள பிரச்னைகள், கொள்முதலில் நடக்கும் குறைகள் உள்ளிட்டவற்றை ஒவ்வொன்றாக கண்டறிந்து சீரமைத்து வருகிறோம்.

அமைச்சர் மனோ தங்கராஜ்

சாமானிய மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் பொதுத்துறை நிறுவனம் ஆவின் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். ஒரு நிறுவனத்தைப் (அமுல்) பார்த்து பயப்படும் வகையில் அரசு இல்லை. தமிழக அரசு பால் கொள்முதல் பகுதிக்குள் இன்னொரு நபர் வருவது மரபல்ல. அந்த மரபை கடைபிடிக்க வேண்டும், என்று தான் கூறுகிறோம். ஆவின் நிறுவனத்தின் பலத்தை மேலும் பலப்படுத்தி எது வந்தாலும் சமாளிக்கும் திறனை ஏற்படுத்துவோம். ஆண்டுதோறும் பால் உற்பத்தி செலவு அதிகரித்து வருகிறது இந்த ஆண்டு 10% பால் பொருள்கள் உற்பத்தியை அதிகரித்து, விற்பனையை பெருக்கியிருக்கிறோம். பால் தேவை அதிகரிக்கும் போது அதை சமாளிப்பதற்கான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது. பொது வெளியில் பேசப்படுகின்ற அளவிற்கு அச்சப்படும் அளவிற்கு எந்தவிதமான சவால்களும் இல்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.