நாட்டை முன்னேற்றக் கூடிய முக்கிய வளம் மனித வளம்

  • க.பொ.த (உயர்தர) பரீட்சை நடத்துவதற்கான ஒரு குறிப்பிட்ட மாதமொன்று சட்டப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
  • அரச மற்றும் தனியார் பாடசாலைகளின் தரத்தை ஆராய பொறிமுறையொன்று அவசியம் – ஜனாதிபதி வலியுறுத்தல்.

உலகில் உள்ள ஒவ்வொரு அபிவிருத்தியடைந்த நாடும் அந்த நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதன் ஊடாகவே முன்னோக்கி வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

எனவே, 2048 ஆம் ஆண்டில் அபிவிருத்தியடைந்த நாடு என்ற இலக்குகளை அடைவதற்கு முறையான கல்வி முறைமை மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் நாட்டிற்கு தேவை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பை தயாரிப்பதற்கான அமைச்சர்கள் குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் முதலாவது கலந்துரையாடலில் நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் மனித வளத்தை சீரமைத்தல், கல்வி முறையின் மூலம் அறிவு, திறன் மற்றும் திறமைகளைக் கொண்ட பணியாளர்களை உருவாக்குதல் மற்றும் நாட்டை பிராந்திய கல்வி மையமாக மாற்றும் நோக்கத்துடன்,ஜனாதிபதியின் தலைமையில் 10 உறுப்பினர்களைக் கொண்ட ‘கல்வித்துறை அமைச்சர் குழு’ நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட உபகுழு, குழந்தைப் பருவம் மற்றும் முன்பள்ளிக் கல்வி, ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி, உயர்கல்வி, தொழில் பயிற்சி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய 05 துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகள் குறித்து ஆராய்ந்து தயாரித்துள்ள அறிக்கை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளது.

எதிர்கால சவால்களை முறியடித்து நாட்டில் பயிற்றுவிக்கப்பட்ட பணியாளர்களை உருவாக்கக் கூடிய எதிர்கால சந்ததியை கட்டியெழுப்புவதற்கு கல்வி முறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசரத் திருத்தங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பரீட்சைகளை நடத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்த சட்டரீதியாக குறித்த ஒரு மாதத்தை அறிவிக்கவுள்ளதாகவும், அதனை மாற்றுவதானால் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற வேண்டும் எனவும், மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளில் தவிர அதனை மாற்ற முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மாணவர்களை 13 வருடங்கள் பாடசாலைக் கல்வியில் தக்கவைக்க வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்த ஜனாதிபதி, க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை மற்றும் 05ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் அவசியம் தொடர்பில் துரிதமாக தீர்மானம் எட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், தொழில்நுட்பத்துடன் கல்வி இணைந்து முன்னோக்கிச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும், பாடசாலை முறையின் தரத்தை பேண வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய ஜனாதிபதி, பாடசாலை மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தினார்.

அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் தரமான கல்வி வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்காக ஆய்வு அலுவலகங்கள் செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி விளக்கினார்.

தொழிற்பயிற்சி துறையில் உடனடி மாற்றங்கள் தேவை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.பயிற்சி பெற்ற பணியாளர்களைக் கொண்ட நாடு நிச்சயமாக அபிவிருத்தியை நோக்கி நகரும். எனவே எதிர்கால தொழில்சந்தைக்குத் தேவையான பயிற்சியளிக்கப்பட்ட பணியாளர்களை உருவாக்குவதற்கு இலங்கையின் தொழிற்பயிற்சித் துறை துரிதமான மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

கல்வியைப் பற்றிப் பேசுவதற்கு முன், நமது நீண்டகாலப் பொருளாதாரத் தத்துவத்தைப் பற்றிப் பேச வேண்டும். கல்வி அதற்கு சமாந்தரமாக செல்ல வேண்டுமே தவிர இரண்டு வழிகளில் செல்ல முடியாது. குறுகிய காலத்தில் கடன் சுமையில் இருந்து விடுபட முயற்சி செய்துவருகிறோம். அதன்பிறகு, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமானால் மூன்று ஆண்டுகளில் 8% முதல் 9% வரை பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும்.குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாவது அந்த நிலை நீடிக்க வேண்டும். இதைச் செய்தால்தான் நாம் முன்னேற முடியும்.பொருளாதார வளர்ச்சி விகிதத்தை பாதிக்கும் பல காரணிகள் உள்ளன.

உற்பத்திகளை மேம்படுத்த முடியுமாக இருந்தால் அது ஒரு பெரிய முன்னேற்றமாகும். நாம் குறைந்தபட்சம் மலேசியாவையும் சீனாவையும் பார்க்க வேண்டும். அதன் பிறகு சிங்கப்பூர் போன்ற பாரிய வளர்ச்சிக்கு செல்லலாம். ஒரேயடியாக இதனைச் செய்ய முடியாது.

இதற்கு நமது முக்கிய வளம் மனித வளமாகும். இன்று தென் கொரியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகள் மனித வளத்தைப் பயன்படுத்தி அபிவிருத்தி அடைந்துள்ளன. இந்தியாவும் அந்த இலக்குகளை எட்ட எதிர்பார்க்கிறது.அந்த நிலைக்கு நாம் எப்படி செல்வது என்பதை தீர்மானிக்க வேண்டும்.

மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் தேவைக்கேற்ப பயிற்சி பெற்ற பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படும். அதைச் சமாளிக்கும் வகையில், தானியங்கி முறையில் கவனம் செலுத்துவதுடன், இலங்கையை முன்னோக்கி நகர்த்தும் பயணத்தில், மேம்பட்ட தானியங்கி உற்பத்தி செயல்முறையிலும் கவனம் செலுத்த வேண்டும்.

எனவே, முதலில் கல்வி, பொருளாதாரக் கட்டமைப்பு, காலநிலை மாற்றம் ஆகிய மூன்று துறைகளும் ஒன்றிணைய வேண்டும். போட்டி இருந்தால்தான் முன்னேற முடியும். எங்கள் இலக்கு மிகவும் போட்டி நிறைந்த பொருளாதாரமாகும்.

இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க உட்பட கல்வி நிபுணத்துவக் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.