வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மல்யுத்த சங்க தலைவர் மீது சிறுமி அளித்த புகாருக்கு ஆதாரம் இல்லை எனவும், இதனால் அவர் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் எனவும் டில்லி நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
இந்திய மல்யுத்த சங்க தலைவரும், பா.ஜ., எம்.பி.,யுமான பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது 6 மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் ஒரு சிறுமி உட்பட 7 பேர் பாலியல் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பிரிஜ்பூஷண்சரண் சிங் மீது இரண்டு வழக்குகளை பதிவு செய்தனர். அதில், 6 மல்யுத்த வீரர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஒரு வழக்கும், சிறுமியின் புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் அடிப்படையிலும் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் டில்லி போலீஸ் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிறுமி அளித்த புகாருக்கு ஆதாரம் கிடைக்கவில்லை. இதனால், பிரிஜ்பூஷண் சரண் சிங் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் போலீசார் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக டில்லி போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: போட்டிக்கு தேர்வு செய்யாத காரணத்தினால், சிறுமி புகாரை அளித்துள்ளார். கடுமையாக உழைத்தும் வாய்ப்பு கிடைக்காத கோபத்தில் பாலியல் புகாரை அந்த சிறுமி கூறியுள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன் மீதான விசாரணை ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை
இதனிடையே, மல்யுத்த வீரர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில், பிரிஜ்சரண் சிங், வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன், தகாத முறையில் நடந்து கொண்டார் என தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement