புதுடெல்லி: நாட்டில் இன மோதல், தேர்வு முறைகேடுகளை தடுப்பது உட்பட பல்வேறு காரணங்களுக்காக இணைய சேவை முடக்கம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘இணைய சுதந்திர சம்மேளனம்’ மற்றும் ‘மனித உரிமை கண்காணிப்பு’ அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
பேராட்டங்கள், இன மோதல்களின் போது வதந்திகள் பரவுவதை தடுக்கவும், பள்ளி, கல்லூரி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கவும், அரசு பணி நியமனங்களுக்கான தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கவும், வன்முறைகளை தடுக்க மற்றும் மற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளின் போது நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவும் நாடு முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டு வருகிறது.
நாட்டில் 28 மாநிலங்களில் 18 மாநிலங்களில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஒரு முறையாவது இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. போராட்டங்களின் போது உள்ளூர் நிர்வாகத்தினர் 54 முறை இணைய சேவையை முடக்கி உள்ளனர். அதேபோல் பள்ளி மற்றும் அரசு தேர்வுகளின் போது 37 முறை இணையதள சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜாதி மோதல்களின் போது 18 முறையும் வேறு பிற சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக 18 முறையும் நாட்டின் பல மாநிலங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
இதில் ராஜஸ்தான் மாநிலத்தில் தான் அதிகபட்சமாக 85 முறை இணைய சேவை கடந்த 3 ஆண்டுகளில் முடக்கப்பட்டுள்ளது. இதில் யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீர் அடங்கவில்லை. அங்கு அமைதியை நிலைநாட்ட அடிக்கடி இணைய சேவை முடக்கப்பட்டு வருகிறது. இணையதள சேவை முடக்கம் தொடர்பாக எந்தெந்த மாநிலங்களில் எத்தனை முறை இணையம் முடக்கப்படுகிறது என்ற புள்ளிவிவரங்களை மத்திய அரசு சேகரிப்பதில்லை.
பல நேரங்களில் தேவை இல்லாமலும் இணைய சேவை முடக்கப்படுவதாக புகார்கள் எழுகின்றன. மேலும் இணையம் முடக்கப்பட்ட பிறகும் கூட, மக்களின் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை. இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.