Malaysia Vasudevan Top 10 Songs: பூங்காற்று திரும்புமா.. மலேசியா வாசுதேவனின் சிறந்த 10 பாடல்கள் இதோ

சென்னை: மறைந்த பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் 78வது பிறந்ததினம் இன்று.

பாடகர், நடிகர், இயக்குநர் என பன்முகத்திறமையாளராக வலம் வந்த மலேசியா வாசுதேவன், ஆயிரக்காணக்கான பாடல்களை பாடியுள்ளார்.

முக்கியமாக இளையராஜா – மலேசியா வாசுதேவன் கூட்டணியில் வெளியான பாடல்கள் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட் எனலாம்.

அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சிறந்த 10 பாடல்களின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

மலேசியா வாசுதேவன் சிறந்த 10 பாடல்கள்
தமிழ்த் திரையிசை உலகில் தனித்துவமான குரல் வளம் கொண்டவர்களில் மலேசியா வாசுதேவனும் ஒருவர். மெலடி, வெஸ்டர்ன், கிராமிய மண்மனம் கொண்ட பாடல்கள் என ஒவ்வொன்றிலும் தனக்கான தனி முத்திரையை பதித்துள்ளார். சிங்கம் போன்று கர்ஜிக்கும் குரலில் இருந்து இப்படியெல்லாம் காதல் பாடல்களைப் பாட முடியுமா எனவும் திகைத்த வைத்தவர் மலேசியா வாசுதேவன்.

1. ‘இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது’ என்ற இப்பாடல் மலேசியா வாசுதேவனின் கோல்டன் மெலடிகளில் ஒன்று. இளையராஜாவின் இசையில் மலேசியா வாசுதேவனும் ஜானகியும் சேர்ந்து காதல் கனிரசத்தை வடித்திருப்பார்கள். வெஸ்டர்ன் டைப்பில் அட்டாகசமான காதல் டூயட் என்ற வகையில் மலேசியா வாசுதேவன் ரசிகர்கள் இப்பாடலை கொண்டாடாமல் இருக்க வாய்ப்பே இல்லை. சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கமலின் சைக்கோ கேரக்டரின் நடுவே ஒரு மன்மதன் இருக்கிறான் என்பதை மலேசியா வாசுதேவன் உணர வைத்திருப்பார்.

2. பூங்காற்று திரும்புமா என்ற பாடல், இசை ரசிகர்களின் நெஞ்சங்களில் ஒரு குழந்தையை போல தொட்டில் கட்டி காலத்துக்கும் ஆடிக் கொண்டே இருக்கும் ரகத்தைச் சேர்ந்தது. முதல் மரியாதை படத்தில் இடம்பெற்ற இப்பாடலில் சிவாஜிக்காக குரல் கொடுத்திருப்பார் மலேசியா வாசுதேவன். சில வரிகளில் நடிகர் திலகத்தையே ஓவர்டேக் செய்து தான் ஒரு ‘சிம்மக் குரல் திலகம்’ என தாலாட்டு பாடியிருப்பார். கூடவே எஸ் ஜானகியும் மலேசியா வாசுதேவனுக்கு எசைப் பாட்டுப் பாடி மெய் மறக்கச் செய்திருப்பார். இளைராஜா – மலேசியா வாசுதேவன் கூட்டணியில் ரத்தினமாக ஜொலிக்கும் இப்பாடல்.

3. தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி பாடல் மலேசியா வாசுதேவன் ரசிகர்களுக்கான ஜீவ சுரபியாகும். தூரல் நின்னு போச்சு படத்திற்காக இளையராஜா இசையில் பாக்யராஜுக்காக குரல் கொடுத்திருப்பார். இப்பாடலிலும் மலேசியா வாசுதேவன் – ஜானகி காம்போ இன்னொரு அசாத்தியத்தை நிகழ்த்தியிருப்பார்கள். மலேசியா வாசுதேவனின் பாடல்களை எந்த வகையில் வரிசைப்படுத்தினாலும் அதில் தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி பாடலுக்கு தனி இடம் உண்டு.

4. கோடை காலக் காற்றே பாடலுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இடம்பெற்ற இப்பாடல் 80களின் காலக்கட்டத்தில் காதலர்களின் தேசிய கீதமாக கொண்டாடப்பட்டது. இப்பாடலை வாயில் முனுமுனுக்க தவறியவர்கள் காதலுக்கே விரோதியானவர்கள் என சொல்லிவிடலாம். இளையராஜாவின் ரம்மியமான இசையும் மலேசியா வாசுதேவனின் குரலும், மழைக்காலத்தில் நடனமாடும் மயில்களைப் போல ரசிகர்களின் மனதை வருடியது.

5. பூவே இளைய பூவே பாடலும் மலேசியா வாசுதேவன் ரசிகர்களுக்கான இசை பரிசாக அமைந்தது. இளையராஜாவின் இசையில் கோழி கூவுது படத்தில் இப்பாடல் இடம்பெற்றது. பூவே இளைய பூவே பாடலில் பல்லவியும் சரணமும் இருவேறு தாளக் கட்டில் Fusion ரகத்தில் வருவதாக இசையமைத்திருப்பார் இளையராஜா. ஆனால், இந்த இரண்டு விதமான தாளக் கட்டையும் தனது குரலில் அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றிருப்பார் மலேசியா வாசுதேவன். முக்கியமாக உச்சஸ்தாயில் ‘எனக்குத்தானே’ என மலேசியா வாசுதேவன் ரிப்பீட் செய்யும் போது சிலிர்க்கும்.

6. ஏ ராசாத்தி ரோசாப்பூ பாடல் மலேசியா வாசுதேவனின் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது. எப்போதும் ஒரே வகையான பாடல்களை மட்டுமே கேட்டு ரசித்த ரசிகர்களை, எல்லாவிதத்திலும் வசீகரித்தது ‘ஏ ராசாத்தி ரோசாப்பூ’ பாடல். இளையராஜா, பாரதிராஜா கூட்டணியில் வெளியான என் உயிர் தோழன் படத்தில் இப்பாடல் இடம்பெற்றிருந்தது. மலேசியா வாசுதேவன் குரலும் அதனை சூழ்ந்து ஒலிக்கும் ஆர்ப்பாட்டமில்லாத அந்த கோரஸும் அடடே ரகம் கொண்ட தனித்துவமான அனுபவம் எனலாம்.

7. பேர் வச்சாலும் வைக்காமப் போனாலும் பாடலை இந்தப் பட்டியலில் குறிப்பிடாமல் போனால் மலேசியா வாசுதேவனின் ஆன்மா கூட மன்னிக்காது. ராஜாவின் அட்டகாசமான துள்ளலான இசையில் கமல்ஹாசன் என்ற கலைகளின் பிதாமகனை இளமையோடும் கிறக்கத்தோடும் ஆட வைக்க வேண்டும். பாடல் முழுவதும் ஒருவிதமான ரொமாண்டிக் இருக்க வேண்டும், அது ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் வேண்டும். இதற்கெல்லாம் மலேசியா வாசுதேவனின் குரலில் வித்தைகள் இல்லாமல் போனால் அது எப்பேற்பட்ட துயரம். அப்படி எதுவும் நடந்திடாமல் மலேசியா வாசுதேவனும் எஸ் ஜானகியும் சேர்ந்து இப்போது வரையும் ரசிகர்களை மகிழ்வித்து வருவதே இப்பாடலில்ன் தனித்துவம்.

8. வா வா வசந்தமே பாடல் மலேசியா வாசுதேவனின் குரலில் என்றைக்குமான இசை வசந்தம் எனலாம். புதுக்கவிதை படத்திற்காக இளையராஜாவின் இசையில் சூப்பர் ஸ்டாருக்கு குரல் கொடுத்திருப்பார் மலேசியா வாசுதேவன். ஈரம் சொட்டும் அரவணைப்புடனும் கருணையின் மொத்த வடிவமாகவும் இப்பாடலுக்காக தனது குரலில் புத்துயிர் கொடுத்து பாடியிருப்பார் மலேசியா வாசுதேவன். இப்பாடலை தவிர்த்துவிட்டால் மலேசியா வாசுதேவனின் இசை பயணமும் முழுமைபெறாது. ஆகவே இந்தப் பட்டியலில் வா வா வசந்தமே இடம்பிடித்தே ஆக வேண்டும்.

9. என்னம்மா கண்ணு சவுக்கியமா பாடலில் எஸ்பிபியுடன் இணைந்து ஒரு இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார் மலேசியா வாசுதேவன். இப்பாடலின் விஷுவலில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் சத்யராஜும் யார் கெத்து என காட்டிக்கொள்ள திரையில் முட்டி மோதிக்கொண்டிருப்பார்கள். ஆனால், பின்னணியில் ராஜாவின் இசை ஒருபக்கமும், மலேசியா வாசுதேவன், எஸ்பிபி குரல்கள் இன்னொரு பக்கமுமாக இணைந்து பெரும் போர் முழக்கமே செய்திருக்கும்.

10. தென்கிழக்குச் சீமையிலே பாடல் மலேசியா வாசுதேவனின் இன்னொரு உச்சம். இளையராஜாவின் இசைக்கு மட்டுமே சொந்தக்காரராக வலம் வந்துக்கொண்டிருந்த மலேசியா வாசுதேவனை, தென்கிழக்குச் சீமையிலே பக்கம் கட்டித் தூக்கி வந்தார் ஏஆர் ரஹ்மான். அதற்கு நியாயம் சேர்க்கும் விதமாக மண் மனத்தின் ஆன்மாவோடு அண்ணன் – தங்கை பிரிவையும் வலியையும் இசை ரசிகர்களுக்கு பரிசாகக் கொடுத்தது இக்கூட்டணி. இப்பாடல் மூலம் நவீன இசையில் பாட வேண்டும் என்றாலும் எக்காலத்துக்கும் பொருந்தும் குரலாக மலேசியா வாசுதேவன் இருப்பார் என்பதை அனைவரும் அறிந்துகொள்ளலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.