சென்னை: நிதியமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சாரத் துறையையும், வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்து, அமைச்சரவையில் மாற்றம் செய்ய ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையான அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால், அவர் வகித்து வந்த இரண்டு துறைகளை மற்ற அமைச்சர்களுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தமிழக நிதி அமைச்சராக இருந்துவரும் தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக மின்சாரத் துறையையும், வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்துவரும் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் வழங்க முதல்வர் முடிவெடுத்துள்ளதாக, தகவல் வெளியாகி இருக்கிறது.
அமைச்சர் செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகவும், தங்கம் தென்னரசுக்கு மின்சாரத் துறையைும், முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளதாகவும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்று மாலையே வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில், அவரது நீதிமன்றக் காவலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. ஏற்கெனவே நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுவிட்டதால் அதை ரத்து செய்ய முடியாது எனக் கூறி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மூத்த அமைச்சர்கள், செந்தில்பாலாஜி வகித்து வரும் துறைகளை யாரிடம் பிரித்து வழங்குவதுஎன்பது குறித்து நேற்று ஆலோசனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.