ஹைதராபாத்: இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் படங்கள் வெளியானாலே அதில், பிரம்மாண்டத்துக்கு பஞ்சமே இருக்காது. இன்று உலகையே ஆட்டிப் படைத்து வரும் AI தொழில்நுட்பத்தை வைத்து மகேஷ் பாபு படத்தில் வித்தியாசமான மேஜிக்கை காட்ட ராஜமெளலி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகுபலி படத்திற்கு பிறகு சர்வதேச மார்க்கெட்டை வெறித்தனமாக ஓபன் செய்து வைத்துள்ளார் இயக்குநர் ராஜமெளலி.
கடந்த ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை கோல்டன் குளோப், ஆஸ்கர் என ஏகப்பட்ட விருது விழாக்களுக்கு கொண்டு சென்று விருதுகளையும் தட்டித் தூக்கிய ராஜமெளலி வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மகேஷ் பாபுவின் படத்தை இயக்கப் போவதாக ஹாட் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆஸ்கர் விருது: இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஸ்ரேயா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் சுதந்திர போராட்ட கால திரைப்படமாக உருவாகி இருந்த நிலையில், அந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது.
கோல்டன் குளோப் விருதை தொடர்ந்து ஆஸ்கர் விருதையும் அந்த பாடலுக்காக இசையமைப்பாளர் மரகதமணி கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் பெற்று டோலிவுட் திரையுலகிற்கு பெருமை சேர்த்தனர்.
மகேஷ் பாபு பிறந்தநாளில் ஆரம்பம்: இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகி வரும் குண்டூர் காரம் படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வரும் மகேஷ் பாபு வரும் ஆகஸ்ட் 9ம் தேதி 48வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.
மகேஷ் பாபுவின் பிறந்தநாளிலேயே ராஜமெளலி இயக்கவுள்ள மெகா பட்ஜெட் படத்தை ஆரம்பிக்கப் போவதாக சினிமா வட்டாரத்தில் ஹாட் அப்டேட்கள் கசிந்துள்ளன.
ஏஐ தொழில்நுட்பத்திற்கு பல கோடி: சினிமாவில் டீ ஏஜிங் போன்ற விஷயங்களை AI எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் செய்து வரும் நிலையில், அந்த ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து ஏகப்பட்ட மேஜிக்குகளை சினிமாவில் நிகழ்த்தலாம் என்கிற பலே ஐடியாவுடன் ராஜமெளலி இந்த படத்தை பண்ணப் போகிறாராம்.
அனுமார் போன்ற பராக்கிரம சக்தி கொண்ட நபராக மகேஷ் பாபு வனம் சார்ந்த இந்த படத்தில் நடிக்கப் போவதாகவும் ஏஐ தொழில்நுட்பத்திற்காக மட்டும் பல கோடிகளை செலவு செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர். மகேஷ் பாபு படம் மூலமாக அடுத்த முறை இன்னும் சில ஆஸ்கர் விருதுகளையும் ராஜமெளலி அள்ளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.