உயிர்த்தியாகம் செய்த அமைதிப்படை வீரர்களுக்கு ஐ.நா. தலைமையகத்தில் நினைவிடம் – இந்தியா முன்மொழிந்த தீர்மானம் ஏற்பு

நியூயார்க்: உயிர்தியாகம் செய்த அமைதிப்படை வீர்களுக்கு ஐ.நா தலைமையகத்தில் நினைவுச் சுவர் எழுப்ப வேண்டும் என்று கோரி இந்தியா கொண்டு வந்த தீர்மானம் சுமார் 190 நாடுகளின் ஒப்புதலுடன் ஏற்கப்பட்டுள்ளது.

வன்முறையால் பாதிக்கப்படும் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்தும் பணியை மேற்கொள்வதற்காக ஐநா சார்பில் அமைதிப் படை செயல்பட்டு வருகிறது. இதில், பல்வேறு நாடுகளின் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சியின்போது அமைதிப்படை வீரர்களில் பலர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உயிர்தியாகத்தைப் போற்றும் வகையில், ஐநா தலைமையகத்தில் நினைவுச் சுவர் எழுப்ப வேண்டும் என்று ஐ.நா. பொது அவையில் இந்தியா நேற்று வரைவுத் தீர்மானத்தை கொண்டு வந்தது.

ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் இந்த வரைவுத் தீர்மானத்தை வாசித்தார். அப்போது, “உலகில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் 125 நாடுகளைச் சேர்ந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அமைதிப்படை வீரர்கள் 71 பகுதிகளில் பணியாற்றி இருக்கிறார்கள். தற்போதும்கூட மோதல்நிகழும் பகுதிகளில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமைதிப்படை வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள். அமைதி காக்கும் பணியில் இதுவரை 4,200 வீரர்கள் உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள்” என ருச்சிரா கம்போஜ் தெரிவித்தார்.

இந்தியாவின் முயற்சியால் கொண்டு வரப்பட்ட இந்த வரைவுத் தீர்மானம், இந்தியா, வங்கதேசம், கனடா, சீனா, டென்மார்க், எகிப்து, பிரான்ஸ், இந்தோனேஷியா, ஜோர்டான், நேபாள், ருவாண்டா, அமெரிக்கா உள்ளிட்ட 18 நாடுகளால் ஐ.நா. பொது அவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வரைவுத் தீர்மானம் ஓட்டெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. சுமார் 190 நாடுகள் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், “ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் இந்தியாவினால் முன்மொழியப்பட்ட, உயிர்தியாகம் செய்த அமைதிப் படை வீரர்களுக்கு புதிய நினைவுச் சுவர் அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் மகிழ்ச்சி. இந்த தீர்மானம் 190 நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளது. அனைவரின் ஆதரவுக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.