சென்னை: நடிகை சமந்தா கடந்த ஆண்டு மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த நோய் பாதிப்பில் சிக்கி ஓராண்டாகிறது என இன்ஸ்டாகிராமில் தற்போது பதிவிட்டுள்ளார்.
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதிலிருந்து மீண்டு வர சில மாதங்கள் ஓய்வெடுத்து சிகிச்சை மேற்கொண்டார். இனிமேல், நடிகை சமந்தாவால் எழுந்து நடமாடக் கூட முடியாது என வதந்திகள் பரவின.
ஆனால், அனைத்தையும் முறியடித்து விட்டு மீண்டும் சினிமா மற்றும் ஓடிடி வெப்சீரிஸ்களில் தீவிரமாக நடித்து வரும் சமந்தா செர்பியாவில் உள்ள பிரபல தேவாலயத்தில் வழிபாடு நடத்தி உள்ளார்.
செர்பியா சர்ச்சில் சமந்தா: சிட்டாடல் வெப்சீரிஸ் ஷூட்டிங்கிற்காக நடிகை சமந்தா தற்போது செர்பியாவில் உள்ளார். விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தின் படப்பிடிப்புக்காக துருக்கிக்கு சென்றிருந்த போட்டோக்களை வெளியிட்டு வந்த சமந்தா தற்போது செர்பியாவில் உள்ள சர்ச்சில் உருகி மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த போட்டோக்களுடன் சேர்த்து அவர் பதிவிட்ட போஸ்ட் தான் ரசிகர்களை ரொம்பவே ஃபீல் பண்ண வைத்துள்ளது.
மயோசிடிஸ் பாதித்து ஒரு வருடம் ஆகிடுச்சு: கடந்த ஆண்டு நடிகை சமந்தா யசோதா படத்தின் ரிலீஸை முன்னிட்டு தனக்கு மயோசிடிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டப்பிங் தியேட்டரிலேயே கையில் ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டு பேசும் போட்டோவை போட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
அதன் பின்னர் யசோதா படத்தின் ப்ரமோஷனின் போது சமந்தா கதறி அழுதது ரசிகர்களை சங்கடத்தில் ஆழ்த்தியது. யசோதா படமும் வெளியாகி வெற்றிப்படமாக மாறியது. இந்நிலையில், மயோசிடிஸ் பாதித்து ஒரு வருடம் ஆவதாகவும் தனக்காக பிரார்த்தனை செய்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
சொதப்பிய சாகுந்தலம்: யசோதா படம் ஹிட் அடித்த அளவுக்கு சமந்தாவின் சாகுந்தலம் படம் வெற்றியடையவில்லை. அந்த படம் படு தோல்வியை சந்தித்து தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது.
அடுத்ததாக விஜய் தேவரகொண்டா உடன் குஷி மற்றும் வருண் தவான் உடன் சிட்டாடல் என பிசியாக நடித்து வருகிறார் சமந்தா.
உப்பு, சர்க்கரை கூட சாப்பிடல: மயோசிடிஸ் எனும் கொடிய நோயால் அவதிப்பட்ட வந்த சமந்தா கடந்த ஒரு வருடமாக தனது வாழ்க்கையே பெரிய போராட்டக்களமாக மாறியது. என் உடம்புக்குள்ளே பல போராட்டங்கள் நடைபெற்றன. சர்க்கரை, உப்பு மற்றும் பருப்பு வகைகள் கூட உட்கொள்ள முடியாத சூழ்நிலை, மாத்திரைகள் மட்டுமே உணவாக பல நேரங்களில் என்னை பாடாய் படுத்தியது.
சினிமாவிலும் தோல்வியை சந்தித்தேன், ஓராண்டு கால பிரார்த்தனை, பூஜைகள், எந்தவொரு பரிசையும் எதிர்பார்த்து கடவுளை பிரார்த்திக்கவில்லை. மன வலிமைக்காகவும் அமைதிக்காகவும் தான் எனது பிரார்த்தனைகள் இருந்தன. சில சமயம் பெரிய வெற்றி என்பது அவசியமில்லை. முன்னோக்கி நகர்வதே எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கிறேன்.
என்னை போல இந்த உலகில் எண்ணற்ற மனிதர்களும் தினம் தினம் வாழ்க்கையுடன் போராடிக் கொண்டு தான் இருக்கின்றீர்கள், உங்களுக்காகவும் சேர்த்து நான் வேண்டிக் கொள்கிறேன். கடவுள் அருள் வழங்க தாமதிக்கலாம். ஆனால், என்னைக்குமே கை விட்டது கிடையாது என பாட்ஷா படத்தில் ரஜினிகாந்த் சொல்வது போல தத்துவமாக பொழிந்து தள்ளி இருக்கிறார் சமந்தா.
சமந்தாவின் போஸ்ட்டுக்கு நடிகை ராஷி கன்னா, தொகுப்பாளினி டிடி நீலகண்டன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கமெண்ட் போட்டு லைக்குகளை குவித்துள்ளனர்.