7500 கல்வியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு நாளை (16) புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த கடந்த 14 ஆம் திகதி கல்வி அமைச்சில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்…
ஆசிரியர் நியமனம் தொடர்பாக பலர் மேன்முறையீட்டுக்கு வருகின்றனர். அந்த மேன்முறையீடுகள் எதனையும் நாங்கள் பரிசீலிக்க மாட்டோம். ஆசிரியர் பற்றாக்குறையான இடங்களை ஆராய்ந்து அவ்விடங்களுக்கு நியமனங்களை மேற்கொண்டுள்ளோம். எந்த அரசியல்வாதி வந்தாலும், அதற்கு இடமளிக்க மாட்டேன்.
அத்துடன், 35 வயதுக்குட்பட்ட 5500 புதிய பட்டதாரிகளுக்கு விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம், சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களை கற்பிப்பதற்கான ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கு 15.06.2023 வியாழக்கிழமை அனுமதியைப் பெற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
இதேவேளை, ஜூன் மாதம் 30ஆம் திகதிக்குள் பாடசாலைச் சீருடைகள் கிடைக்காதவர்கள் இருப்பின், கல்வி அமைச்சின் துரித தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொண்டு தெரிவிக்கவும், அதன்படி, மீதமுள்ள சீருடைகளையும் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.