பெங்களூரு: கர்நாடகாவில் மத மாற்ற தடைச் சட்டம் திரும்பப் பெறப்படும் என அம்மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ள நிலையில், காங்கிரஸ் ‘புதிய முஸ்லிம் லீக்’ கட்சியாக இருக்கிறது என பாஜக விமர்சித்துள்ளது.
கர்நாடகாவில் முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த மதமாற்ற தடைச் சட்டத்தை திரும்பப் பெற கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், முந்தைய பாஜக அரசால் கடந்த ஆண்டு செப்டம்பரில் கொண்டு வரப்பட்ட மதமாற்ற தடைச் சட்டத்தை திரும்பப் பெறுவது என முடிவு எடுக்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற விவகாரத் துறை அமைச்சர் பாட்டீல், “மதமாற்ற தடைச் சட்டம் குறித்து அமைச்சரவை விவாதித்தது. அதில், மதமாற்ற தடைச் சட்டத்தை திரும்பப் பெறுவது என முடிவெடுக்கப்பட்டது. அடுத்த மாதம் 3-ம் தேதி கூட உள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும்” என தெரிவித்தார்.
கர்நாடக அமைச்சரவையின் இந்த முடிவுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் சி.டி.ரவி, “கர்நாடகாவில் பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டம் திரும்பப் பெறப்படுவதை மதமாற்ற மாஃபியாக்கள் உறுதி செய்துவிட்டார்கள். காங்கிரஸ் ‘புதிய முஸ்லிம் லீக்’ கட்சியாக உள்ளது. அது இந்துக்களுக்கு எதிராக எந்த ஓர் எல்லைக்கும் செல்லும்” என குற்றம்சாட்டினார்.
“முதல்வர் சித்தராமையாவின் இந்துக்களுக்கு எதிரான திட்டம் அம்பலமாகி உள்ளது. இந்துக்களை துடைத்தெறிய வேண்டும் என விரும்புகிறீர்களா? சித்தராமையாவிடமும், அவரது அமைச்சரவையிடமும் மதமாற்ற மாபியாக்கள் செல்வாக்கு பெற்று இருக்கிறார்கள். அதன் காரணமாக மதமாற்றத் தடைச் சட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது” என பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பசன கவுடா ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார்.