சென்னை, கிண்டி, கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1,000 படுக்கை வசதிகள்கொண்ட, “கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை” இன்று திறந்துவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழ்நாட்டை ஐந்து முறை முதலமைச்சர் பொறுப்பிலிருந்து ஆட்சி செய்தவர் கருணாநிதி. இவரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட தி.மு.க அரசு பெரும் முயற்சிகளை எடுத்துவந்தது. அதன் முதற்கட்டமாக கிண்டியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையைத் திறந்துவைக்க இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சுமார் 4.89 ஏக்கர் அளவில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் ஆறு தளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அதில், புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, கதிரியக்க நோய் கண்டறிதல், புற்றுநோய் மருத்துவச் சிகிச்சை பிரிவு என பல்வேறு வசதிகளுடன் இந்த மருத்துவமனை கட்டப்பட்டிருக்கிறது. அதில் 10 அறுவை சிகிச்சை அரங்குகள், உயர்தர ஆய்வகங்கள், மாற்றுத்திறனாளிக்களுக்கான சிறப்பு வசதிகள், 10 மின்தூக்கிகள், உணவகங்கள் என பல வசதிகள் இருக்கின்றன.
கடந்த ஆண்டு மார்ச் 22-ம் தேதி, முதலமைச்சர் ஸ்டாலின் இந்த மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இதன் பணிகள் ஒராண்டுக்குள் முடிக்கப்பட்டு, இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், ஏ.வ.வேலு, கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, எம்.பி., டி.ஆர் பாலு , தமிழச்சி தங்கப்பாண்டியன், தயாநிதி மாறன், தலைமைச் செயலாளர் இறையன்பு, முதன்மைச் செயலாளர் முருகானந்தம், சுகாதாரத்துறைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவர்களுடன் மற்ற அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
திறப்பு விழா ஹைலைட்ஸ்!
முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனை திறப்பு ரிப்பனை மருத்துவர் மற்றும் செவிலியர்களுடன் இணைந்து வெட்டி திறந்து வைத்தார். அவர்கள் முதலமைச்சர் காலில் விழுந்து வணங்கினர்.
அதைத் தொடர்ந்து மருத்துவமனை நுழைவாயிலுக்கு அருகில் இருந்த மு.கருணாநிதியின் உருவச்சிலையைத் திறந்துவைத்தார் மு.க.ஸ்டாலின். கலைஞர் பேனாவால் எழுதுவதுபோல சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.