கர்நாடகாவில் புதிதாக ஆட்சியமைத்த காங்கிரஸ், பா.ஜ.க கொண்டுவந்த சட்டங்களைத் தேவைப்பட்டால் நீக்குவோம் என ஆரம்பம் முதலே கூறிவந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு கர்நாடகாவில் பா.ஜ.க கொண்டுவந்த மதமாற்ற தடைச் சட்டத்தை திரும்பப்பெற தற்போதைய காங்கிரஸ் அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது. முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க அரசு மதமாற்ற தடைச் சட்டத்தை அவசர அவசரமாகச் சட்டமன்றத்தில் கொண்டுவந்தது.
அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் இதனைக் கடுமையாக எதிர்த்தது. `கட்டாய மதமாற்றத்தை தடுக்க நமது சட்டமே போதுமானதாக இருக்கும்போது புதிய சட்டம் எதற்கு?’ என்று சித்தராமையா அப்போது கேள்வியெழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட மதமாற்ற தடைச் சட்டத்தை திரும்பப்பெற முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சட்டம் மற்றும் சட்டமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் எச்.கே.பட்டீல், “அமைச்சரவையில் மதமாற்ற தடைச் சட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், மதமாற்ற தடைச் சட்டம் திரும்பப்பெறுவதாக முடிவெடுக்கப்பட்டது.
அடுத்தமாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் அதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும். இதுமட்டுமல்லாமல், பா.ஜ.க-வின் சித்தாந்த வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ்ஸை நிறுவியவர்களில் ஒருவரான சாவர்க்கர் மற்றும் கே.பி.ஹெட்கேவர் பற்றிய அத்தியாயங்களை பள்ளி வரலாற்றுப் புத்தகங்களிலிருந்து நீக்கவும் அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது. மேலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாநில அரசின் பாடலுடன் அரசியலமைப்பின் முகப்புரையை கட்டாயம் படிக்கவும் அமைச்சரவை முடிவுசெய்யப்பட்டிருக்கிறது” என்றார்.