சென்னை: Tamannah (தமன்னா) லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தது குறித்து நடிகை தமன்னா மனம் திறந்து பேசியிருக்கிறார்
கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் அறிமுகமானவர் தமன்னா. ரவிகிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் தமன்னாவின் அழகை பார்த்த தமிழ் திரையுலகம் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியது. வெறும் அழகு மட்டுமின்றி தனக்கு திறமையும் இருக்கிறது என்பதை கல்லூரி படத்தின் மூலம் நிரூபித்தார் தமன்னா.
முன்னணி நடிகை: இதனையடுத்து தமிழில் பிஸியாக வலம் வர ஆரம்பித்தார் அவர். அதன்படி விஜய், அஜித், கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிப்போட்டார். குறிப்பாக 2010ஆம் ஆண்டு மட்டும் அவர் மூன்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கால் பதித்த தமன்னா அங்கும் தனது வெற்றிக்கொடியை நாட்டி ஜொலித்தார். இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.
பாலிவுட்டில் பிஸி: தமிழில் வாய்ப்புகள் குறைந்தாலும் பாலிவுட் அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்ததிருக்கிறது. அங்கு அவர் நடித்த பப்ளி பவுன்ஸர், ப்ளான் ஏ ப்ளான் பி சூப்பர் ஹிட் ஆகாவிட்டாலும் டீசண்ட்டான வரவேற்பையே பெற்றது. அதேபோல் தெலுங்கிலும் அவர் பிஸியாகவே நடித்துவருகிறார். அதன்படி வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கரில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். படம் விரைவில் வெளியாகிறது.
ஜெயிலர் தமன்னா: தமன்னாவுக்கு தமிழில் வாய்ப்புகள் குறைந்துவிட்டன என்ற கருத்து பரவலான எழுந்த சூழலில் அவரை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார் நெல்சன் திலீப்குமார். ரஜினிகாந்த்தை வைத்து அவர் இயக்கும் ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்த்திருக்கிறார். அதேபோல் சுந்தர் சி இயக்கும் அரண்மனை படத்தின் நான்காவது பாகத்திலும் தமன்னா கமிட்டாகியிருக்கிறார். இதனால் அவர் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரிஸ் 2 : தமன்னா நடிப்பில் ஜீ கர்தா வெப் சீரிஸ் உருவாகியிருக்கிறது. இந்த வெப் சீரிஸானது அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கிறது. அருணிமா ஷர்மா இயக்கியிருக்கும் ஜீ கர்தா வெப் சீரிஸில் தமன்னா ஓவர் கவர்ச்சியில் இறங்கி கிறங்கடித்திருக்கிறார். ஜீ கர்தா தவிர்த்து விஜய் வர்மாவுடன் லஸ்ட் ஸ்டோரிஸ் 2விலும் தமன்னா நடித்திருக்கிறார். லஸ்ட் ஸ்டோரிஸ் 2 நெட்ஃப்ளிக்ஸில் ஜூன் 29ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
தமன்னா பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “நான் முத்தக் காட்சியில் நடிப்பதை முன்பெல்லாம் விரும்பியதில்லை. ஆனால் இப்படி நடிப்பதற்கு 18 வருடங்களை கடந்திருக்கிறேன். குறிப்பாக இந்தக் கதைக்கு முத்தக் காட்சி தேவைப்பட்டது. லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் எனது கதையை இயக்கிய சுஜோய் கோஷ் நல்ல இயக்குநர். ஹாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற காட்சிகளில் நான் நடிக்கவில்லை. இந்தியா பல விஷயங்களில் முன்னேறியிருக்கிறது. இருப்பினும் இதுபோன்ற விஷயங்களை அணுகுவதில் இன்னும் முன்னேற்றம் தேவைப்படுகிறது” என்றார்.
விஜய் வர்மாவுடன் காதல்: இந்தச் சூழலில் தமன்னாவும் விஜய் வர்மாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. அதுகுறித்து இரண்டு பேருமே மௌனம் காத்து வந்தனர். இந்தச் சூழலில் சில நாள்களுக்கு முன்பாக விஜய் வர்மாவுடனான தனது காதலை உறுதிப்படுத்தினார் தமன்னா. தனது காதல் பற்றி தமன்னா பேசுகையில்,’என்னுடன் நடிக்கும் நடிகரை காதலிப்பேன் என நான் நினைக்கவில்லை. லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படப்பிடிப்பில் விஜய் வர்மாவுடன் காதல் ஏற்பட்டது. நான் எதிர்பார்க்கும் நபர் போலவே இருந்தார்’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.