அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அதிகாலை அமலாக்கத்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அப்போது தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கதறி அழுதார் செந்தில் பாலாஜி. இதையடுத்து உடனடியாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் செந்தில் பாலாஜி.
அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இதயத்தில் 3 இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத் துறை, மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகளை மாற்ற முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தார்.
அதன்படி மின்சாரத்துறையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துச்சாமிக்கும் கூடுதலாக ஒப்படைப்பதாக தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் குன்றியிருப்பதால் அவரது இலாகாக்கள் மாற்றப்படுவதாக குறிப்பிட்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின். இந்நிலையில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தற்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காரணம் தவறு எனக்கூறி இலாகா மாற்றத்திற்கான பரிந்துரை கடிதத்தை ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பியிருப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ள தகவல் Misleading, incorrect என இரண்டு வார்த்தைகளை ஆளுநர் கடிதம் எழுதியிருப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் துறைகள் மாற்றத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெற அவசியம் இல்லை என்றாலும் மரபுக் கருதி கடிதம் அனுப்பப்பட்டது என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் திசை திருப்பும் வகையில் தவறான தகவல் இருப்பதாகவும் சரியான காரணத்தை மேற்கோள் காட்டி பரிந்துரை கடிதத்தை அனுப்புமாறும் ஆளுநர் ஆர்என் ரவி கேட்டுள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். ஆளுநர் மறுத்ததை அடுத்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.