பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் அனுமதி.!!
இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. அதில், செந்தில் பாலாஜி மனைவி தரப்பு கோரிக்கையை ஏற்று, அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும், ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை 22-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த ஏற்பாடுகள் குறித்து மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் ஆய்வு செய்தார்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான ஆணையை மின்னஞ்சல் மூலம் புழல் சிறை நிர்வாகம் ஓமந்தூரார் மருத்துவமனை நிர்வாகத்திற்கு அனுப்பியது.
அதன் பின்னர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்போடு காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். உடனே காவேரி மருத்துவமனை போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மேலும், செந்தில் பாலாஜியும் சிறைத்துறை காவலர்களின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, காவேரி மருத்துவமனையில் அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளது. செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பது குறித்து காவேரி மருத்துவமனையின் முதன்மை செயல் இயக்குனர் அரவிந்தன் தலைமையில் மருத்துவ குழுவினர் ஆலோசனை நடத்தினர்.