சென்னை: Aishwarya Rai (ஐஸ்வர்யா ராய்) நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் வில்லியாக நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்திய அளவில் பிரபலமானவர் ஐஸ்வர்யா ராய். கடந்த 1994ஆம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் கலந்துகொண்டு வென்றதன் மூலம் வெகு பிரபலமானார். மிஸ் யுனிவெர்ஸ் பட்டம் வென்ற சுஷ்மிதா சென்னை விட மிஸ் வேர்ல்டு பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் ரொம்பவே பிரபலமாகிவிட்டார். இந்தியாவிலிருந்து எத்தனை பேர் உலக அழகி பட்டம் வென்றாலும் இந்தியர்கள் மனதில் உலக அழகி என்றவுடன் முதலில் நியாபகத்துக்கு வருபவர் ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டத்தை தவிர்த்து இந்திய அரசு சார்பில் அவருக்கு பத்மஸ்ரீ பட்டமும் வழங்கப்பட்டிருக்கிறது.
சினிமாவில் எண்ட்ரி: உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் இருவர் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் அடுத்தடுத்து அவருக்கு ஹிந்தியில் வாய்ப்புகள் குவிந்தன. இதன் காரணமாக டாப் நடிகையாக உயர்ந்தார் அவர். அந்த சமயத்தில் சல்மான் கானுடன் காதலில் விழுந்த ஐஸ்வர்யா மூன்று வருடங்களுக்கு பிறகு அந்த உறவிலிருந்து வெளியே வந்தார்.
தமிழில் ஐஸ்வர்யா: தமிழில் அறிமுகமானாலும் கோலிவுட்டில் செலக்ட்டிவ்வான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதை அவர் வழக்கமாக வைத்திருக்கிறார். அதன்படி ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ், எந்திரன், ராஜீவ் மேனன் இயக்கத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக அவர் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கிடையே அபிஷேக் பச்சனை காதலித்து திருமணமும் செய்துகொண்டார்.

நந்தினி என்றால் ஐஸ்வர்யா ராய்தான்: பொன்னியின் செல்வன் படத்தில் அவர் ஏற்றிருந்த நந்தினி கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் ஐஸ்வர்யாவின் நடிப்புக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக கல்கி உருவாக்கியிருந்த கதாபாத்திரத்திற்கு ஐஸ்வர்யா ராய் உயிர் கொடுத்துவிட்டார். இனிமேல் பொன்னியின் செல்வன் நந்தினி என்றால் காலத்துக்கும் ஐஸ்வர்யா ராய்தான் நினைவுக்கு வருவார் என்று ரசிகர்கள் புகழ்கின்றனர்.
மீண்டும் வில்லி: இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் வில்லியாக நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி கேஜிஎஃப் படத்தை இயக்கி இந்திய அளவி பிரபலமான இயக்குநர் பிரசாந்த் நீல். அவரது இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தால் நன்றாக இருக்கும் என யோசித்த படக்குழு அவரிடம் பேச்சுவார்த்தையை விரைவில் நடத்தவிருக்கிறதாம். அதேசமயம் தொடர்ந்து வில்லியாக நடிக்க ஐஸ்வர்யா ராய் ஒத்துக்கொள்வாரா என்பது சந்தேகமே என்கின்றனர் திரை ஆர்வலர்கள். பிரசாந்த் நீல் இப்போது பிரபாஸை வைத்து சலார் படத்தை இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது.