ஜகாவ்,
இந்தியாவில் இயற்கை பேரிடர்களின்போது பிறக்கும் குழந்தைகளுக்கு தனித்துவமாக இருப்பதற்காக பெற்றோர்கள் குழந்கைளுக்கு அதன் பெயர்களை வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக கொரொனா பேரிடர் காலத்தின் போது உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் பிறந்த குழந்தைக்கு ‘கொரோனா’ என்று பெயரிடப்பட்டது. மேலும் ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கும் கொரோனா பெயர் வைக்கப்பட்டது.
ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது ஆண் குழந்தைக்கு ‘லாக்டவுன்’ என்று பெயரிட்டனர். மேலும் டிட்லி, ஃபானி மற்றும் குலாம் ஆகிய புயலின் பெயர்களையும் குழந்தைகளுக்கு வைத்தனர். அந்த வரிசையில் தற்போது பிபர்ஜாய் பெயரும் இணைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அரபிக் கடலில் உருவான பிபர்ஜாய் புயல் அதிதீவிர புயலாக மாறியது.
இந்தப் புயல் இன்று குஜராத் மாநில கடற்கரை மாவட்டமான கட்ச் – பாகிஸ்தானின் கராச்சி கடற்கரை இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் குஜராத் மாநிலத்தில் கடற்கரையோரப் பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்கள் அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாம்களில் தங்கியுள்ள குஜராத்தை சேர்ந்த பெற்றோர், பிறந்து ஒரு மாதமான தங்களது பெண் குழந்தைக்கு புயலின் பெயரான பிபர்ஜாய் என பெயர் வைத்துள்ளனர். இது அனைவரது கனத்தையும் ஈர்த்துள்ளது.