திமுகவில் அமைச்சரானதும் செந்தில் பாலாஜி புனிதராகி விட்டாரா? விளாசிவிட்ட வானதி சீனிவாசன்!

விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டதுமே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் 3 இடங்களில் அடைப்பு இருப்பதாக மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியதையடுத்து காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கள் செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் கைதுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் பாஜக அரசு, அமலாக்கத்துறை மூலம் ஆட்சி நடத்துவதாகவும் பாஜகவை எதிர்க்கும் மாநிலங்களில் எல்லாம் இப்படிதான் மத்திய அரசு அச்சுறுத்தி வருகிறது என்றும் குற்றம்சாட்டி காட்டமாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினின் வீடியோவுக்கு அறிக்கை மூலம் பதில் அளித்துள்ளார் பாஜக சட்டமன்ற உறுப்பினரான

. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாது, பிரதமர் மோடியின் ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒரு போதும் தப்பிக்க முடியாது. 2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக குற்றம்சாட்டியது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த வாழ்க்கை விசாரித்த அமலாக்கத் துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது. இதே குற்றச்சாட்டுக்காக செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே வலியுறுத்தினார்.

மத்தியில் வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை நடத்தி வரும் பாஜக அரசு, சட்டத்தின்படியே, அனைத்தையும் செய்து வருகிறது. அதன்படிதான், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், இதில் பழிவாங்கும் நடவடிக்கை என பழிசுமத்தி, ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை திசை திருப்பும் முயற்சியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஈடுபட்டுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.

அதிமுகவில் இருந்தபோது ஊழல்வாதியாக இருந்த செந்தில் பாலாஜி, திமுகவில் சேர்ந்து அமைச்சரானதும் புனிதர் ஆகி விட்டாரா? திமுகவின் முதல் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்பதால் செந்தில் பாலாஜி குற்றமற்றவராகி விடுவாரா?

செந்தில் பாலாஜி மீது தவறில்லை என்றால் அதனை நீதிமன்றங்கள் மூலம் நிரூபிக்க அவருக்கு வாய்ப்புள்ளது. அதைவிடுத்து, நாங்கள் என்ன வேண்டுமானாலும் அட்டூழியம் செய்வோம். நடவடிக்கை எடுக்கக் கூடாது. அப்படி நடவடிக்கை எடுத்தாலும் தடுப்போம் என்றால் அதனை பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அனுமதிக்காது. ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது என்பதை திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் உணர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.