அகமதாபாத்: 10 நாட்களுக்கும் மேலாக அரபிக்கடலில் வீசிய பிப்பர்ஜாய் புயல் குஜராத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது.
அப்போது காற்றின் வேகம் ஜக்காவ் துறைமுகம் அருகே மணிக்கு 125 கிமீ எனவும், சில பகுதிகளில் மணிக்கு 140 கிமீ வேகத்திலும் வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் டாக்டர் எம் மொஹபத்ரா தெரிவித்தார். இதனால் குஜராத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இது தற்போது வடகிழக்கு நோக்கி ராஜஸ்தானை நோக்கி நகர்ந்து பாலைவனத்தை அடையும் நேரத்தில் வலுவிழந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை தொடரும் என்றும், இதே நேரத்தில் ராஜஸ்தானில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேதங்கள் என்ன?: பிப்பர்ஜாய் புயலின் சூறாவளி காற்று மாலை 6:30 மணியளவில் வீசத் தொடங்கியது. கட்ச் மாவட்டத்தில் மணிக்கு 125 கிமீ வேகத்தில் வீசிய காற்றால் பல மரங்கள் வேரோடு சாய்ந்தும், மின்கம்பிகள் சாய்ந்தும் விழுந்தன. மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்தபோது நடந்த விபத்துகளில் குறைந்தது 22 பேர் காயமடைந்தனர் என்று சொல்லப்பட்டுள்ளது.
இது தவிர, 23 விலங்குகளும் பலியாகியுள்ளன, கனமழை மற்றும் பலத்த காற்றுடன் குஜராத்தில் பல்வேறு இடங்களில் 524 மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் சுமார் 940 கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தாழ்வான கரையோரப் பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. மாண்டவி நகரம் இருளில் மூழ்கியது. உயிர்ச்சேதம் குறித்து தற்போதுவரை தகவல் ஏதும் கிடைக்கவில்லை. எனினும், துவாரகா, மாண்ட்வி மற்றும் மோர்பி பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
மொத்தத்தில், 1,600 கிமீ நீளமுள்ள கடற்கரையைக் கொண்ட குஜராத்தில் 94,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்டவர்களில் சிலர் ஆபத்தான பகுதியில் பாதிக்கப்படக்கூடிய குடியிருப்புகளில் தங்கியிருந்தவர்கள். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் அரசின் தங்கும் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டனர்.