மதுரை: தமிழ்நாட்டுக்கு கருணாநிதி நாடு என்றும் பெயர் சூட்டுவார் முதல்வர் ஸ்டாலின் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் 69வது பிறந்தநாள் விழாவையொட்டி, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவையின் சார்பில் திருமங்கலம் ஒன்றியம் நடுவகோட்டை கிராமத்தில் பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதானம் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை திரும்பப்பெறும் கள ஆய்வுக் கூட்டம் நடந்தது. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை வழங்கினார்.
அப்போது ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது; மதுரையில் நூலகத்துக்கு கருணாநிதி பெயரை சூட்டுகிறார். சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் கருணாநிதி பெயர் இப்படியே சென்றால் தமிழ்நாடு என்னவாகும். அண்ணா சூட்டிய தமிழ்நாடு என்ற பெயரை கருணாநிதி நாடு என்றும் மாற்றுவார்.
மதுரையில் 5ம் உலகத்தமிழ் மாநாட்டை நடத்திய எம்ஜிஆரின் படம் வைக்கப்பட்டிருந்தது. அரசியல் காழ்புணர்ச்சியால் அந்த புகைப்படம் அங்கிருந்து எடுக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் எந்த பங்களிப்பும் திமுக செய்யவில்லை. நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் முதலிடத்தில் வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
கடந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்ச்சி சதவீதத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டு குறைவாகத்தான் உள்ளது. மாணவர்கள் திறமையானவர்கள். அரசு ஊக்கப்படுத்தவில்லை. ஏற்கெனவே, நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கூறினார். ஆனால், அதையும் அவர் செய்யவில்லை, என்றார்.