சென்னை: Simbu (சிம்பு) சிம்புவுக்கு தான் வைத்திருந்த கதை குறித்து இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா மனம் திறந்து பேசியிருக்கிறார்.
இயக்குநர் வசந்த்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜே.சூர்யா வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அஜித் எத்தனையோ படங்கள் ஹிட் கொடுத்திருந்தாலும் வாலி படம் அவரது கரியரின் தி பெஸ்ட் படங்களில் ஒன்று. இப்போது வில்லத்தனத்தில் கலக்கிவரும் அஜித் வில்லனாக நடித்த முதல் படம் வாலி. அதேபோல் இரட்டை வேட படங்களில் அந்தக் காலகட்டத்தில் வித்தியாசமான படமும் வாலிதான்.
வாலி, குஷி: தம்பியின் மனைவியை அடைய நினைக்கும் அண்ணன் செய்யும் காரியங்களை த்ரில்லராகவும், அழகாகவும் காட்சிப்படுத்தியிருந்தார் எஸ்.ஜே.சூர்யா. படம் வெளியான சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்ட வாலி திரைப்படம் மெகா ஹிட்டானது. வாலி படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா விஜய், ஜோதிகாவை வைத்து குஷி படத்தை இயக்கினார்.
காதலர்களுக்கு இடையேயான ஈகோ பிரச்னை என்ற மிக சாதாரண லைனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் இன்றுவரை க்ளாசிக் படமாக கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸை என டைட்டில் கார்டிலேயே கதையை கூறிய எஸ்.ஜே.சூர்யாவின் தைரியம் பரவலாக பேசப்பட்டது.
கனவு: தொடர்ந்து அவர் இயக்கிய நியூ, அன்பே ஆருயிரே உள்ளிட்ட படங்கள் கலவையான விமர்சனங்களை திடீரென சினிமாவிலிருந்து காணாமல் போனார் எஸ்.ஜே.சூர்யா. இப்படிப்பட்ட சூழலில் இசை என்ற படத்தை கடந்த 2015ஆம் ஆண்டு இயக்கினார். படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் படத்தின் க்ளைமேக்ஸை எல்லாமே கனவு என்று முடித்திருந்தது ரசிகர்கள் பெரும்பாலானோரை திருப்திப்படுத்தியது.
நடிகர்: இசைக்கு பிறகு எந்தப் படத்தையும் இயக்காமல் இருக்கும் அவர் நடிப்பில் தீவிர கவனம் செலுத்திவருகிறார். இறைவி, மான்ஸ்டர் என தொடர்ந்து படங்களில் நடித்தவர் மாநாடு படத்தில் நடித்தார். படம் மெகா ஹிட்டானது. அந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பார்த்த பலரும் மிரண்டு போனார்கள். அவர் இப்போது ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் நடித்திருக்கிறார்.
சிம்புவுக்கு கதை: இந்நிலையில் படம் நாளை வெளியாகவிருக்கும் சூழலில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் எஸ்.ஜே.சூர்யா. அப்போது சிம்புவுக்கு வைத்திருந்த கதை குறித்து பேசிய அவர், ” சில ஆண்டுகளுக்கு முன் சிம்பு நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. அந்தப் படத்துக்கு போட்டோஷூட்டும் நடத்தினோம். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்தப் படம் கைவிடப்பட்டது.
இந்தப் படத்தில் சிம்புவுக்கு கேங்ஸ்டராகவும், பசு வளர்ப்பவராகவும் இரட்டை வேடம் இருந்தது. அது ஜாலியான படம். அந்தப் படம் தொடர்பாக மாநாடு படத்தின்போது கூட விவாதித்தோம். அந்த படம் மீண்டும் தொடங்கப்படுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்” என்றார். எஸ்.ஜே.சூர்யா சிம்புவை வைத்து இயக்குவதாக இருந்த அந்தப் படத்துக்கு ஏசி என்று பெயர் வைக்கப்பட்டு சிம்பு, அசினை வைத்து போட்டோ ஷூட்டும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.