மதுரை: மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவர், தாக்கல் செய்த மனுவின் விவரம்: தமிழகத்தில் சிறைக் கைதிகளின் வழக்குகளை நடத்தும் வழக்கறிஞர்கள் சிறைக்கு நேரில் சென்று அனுமதி பெற்ற பிறகே, நேர்காணல் அறையில் கைதிகளை சந்தித்து பேச முடியும்.
பாளையங்கோட்டை, திருச்சி, மதுரை மத்திய சிறைகளில் கைதிகளை நேரில் சந்தித்துப் பேச ஒரு நாள் ஆகிறது. இதனால் வழக்கு விசாரணை பாதிக்கப்படுகிறது. எனவே, சிறைக் கைதிகள்- வழக்கறிஞர்கள் நேர்காணலை காணொலி வழியாக நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியாகவுரி அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், நீதிமன்றங்களை மேம்படுத்த மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது. டில்லி உயர் நீதிமன்றத்துக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்குகிறது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு குறைவாகவே நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தில் மாவட்ட நீதி
மன்றத்தில் மாவட்ட நீதிபதிகளைக் காட்டிலும், அதே நீதிமன்றத்தில் பணிபுரியும் தலைமை எழுத்தர் அதிக ஊதியம் பெறுகிறார்.
நீதித்துறை அதிகாரிகளுக்கான திருத்தப்பட்ட ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படாததே காரணம். இந்தப் பரிந்துரைகள் கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன என வேதனை தெரிவித்தனர். பின்னர், தமிழகத்தில் சிறைக் கைதிகள்- வழக்கறிஞர்கள் நேர்காணலை காணொலி காட்சி வழியாக நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சிறைத் துறை டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.