`செந்தில் பாலாஜியை நீக்க கடந்த மாதமே கடிதம் எழுதிய ஆளுநர்… முதல்வர் சொன்ன பதில்’ – பின்னணி என்ன?

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல்நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரின் இலாகா மாற்றம் தொடர்பான தகவல்கள் தான் இப்போது ஹாட் டாக். இந்நிலையில், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என ஆளுநர் 31.5.2023 அன்று ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதம் கிடைக்கப் பெற்ற அடுத்த நாளே, முதலமைச்சர் 1.6.2023 அன்று ஆளுநர் அவர்களுக்கு இது குறித்த தெளிவான சட்ட ரீதியான காரணங்களை விளக்கிக் கூறி பதில் கடிதம் அனுப்பி வைத்திருந்தார்.

செந்தில்பாலாஜி

அந்த கடிதத்தில், `ஆளுநரின் கடிதம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது’ என்பதை சுட்டிக்காட்டியும், `மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்குத்தான் அமைச்சரை நீக்கவோ, நியமிக்கவோ பரிந்துரை செய்யும் அதிகாரம் இருக்கிறது’ என்பதையும், `இது குறித்து பரிந்துரைகளை அளிக்கும் ஆளுநருக்கு அரசியல் சாசனத்தின்படி எவ்வித அதிகாரமும் இல்லை’ என்பதையும் தெளிவாக அரசியல் சட்டப்பிரிவு 164(1) -ஐ மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார்.

மேலும் அக்கடிதத்தில் ஒரு மாநில அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும், இருக்க கூடாது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்பதை முதலமைச்சர் ஆளுநருக்கு அடிப்படை அரசியல் பாடமே எடுத்திருக்கிறார். இன்னும் சொல்வதென்றால் தற்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த போது, வழக்குகள் விசாரணையில் இருந்த நிலையில் எப்படி பதவியில் தொடர்ந்தார்கள் என்பதைக் கூட உதாரணமாக சுட்டிக்காட்டியிருந்தார்.

முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி

அக்கடிதத்திலேயே அமைச்சர் செந்தில் பாலாஜி விஷயத்தில் கடிதம் எழுதும் ஆளுநர் அவர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குத் தொடர கோரப்பட்ட அனுமதியை அளிக்காமல் ஏன் கோப்புகளை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு எல்லாம் எந்த பதிலையும் கூற ஆளுநருக்கு திராணி இல்லை போலும். அதை ஏனோ மறந்துவிட்டு முதலமைச்சர் அவர்கள் அனுப்பிய 1.6.2023 நாளிட்ட பதில் கடிதத்தினை வசதியாக மறைத்து விட்டு, தான் முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தை மட்டும் லீக் செய்திருப்பது அற்பத்தனமான அரசியல் என்றே கருத வேண்டியதிருக்கிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அரசு பணிகள் தொடர்ந்து தொய்வின்றி நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த பொறுப்புகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துச்சாமி ஆகியோருக்கு மாற்றி வழங்கப் பரிந்துரைத்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேற்று மதியம் கடிதம் எழுதியிருந்தார்கள்.

பொன்முடி, ஆளுநர் ரவி

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அமைச்சர்களின் பொறுப்புகளை மாற்றி அமைக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், தேவையற்ற வகையில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து விசாரித்து வருவதை சுட்டிக்காட்டி சரியான காரணத்தை மேற்கோள் காட்டி கடிதம் அனுப்புமாறு ஆளுநர் கேட்டிருக்கிறார். இது மாநில அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதாகவும்- அரசியல் சட்டத்திற்கு புறம்பானதாகவும் நாங்கள் பார்க்கிறோம்.

எப்படி அமைச்சர்களை நியமிப்பதிலும், நீக்குவதிலும் முதலமைச்சரின் பரிந்துரைப்படி ஆளுநர் செயல்பட வேண்டுமோ, அதே போல்தான் இலாகா மாற்றுவதிலும் செயல்பட வேண்டும். ஒரு அமைச்சரின் இலாகாவை ஏன் முதலமைச்சர் மாற்றுகிறார் என்று காரணம் கேட்க ஆளுநருக்கு அதிகாரமும் இல்லை. அரசியல் சட்டப்படி உரிமையும் இல்லை. மேலும் அமைச்சர் ஒருவர் விசாரணையை சந்திப்பது அவரது அமைச்சர் பொறுப்புக்கான தகுதியை எந்த வகையிலும் பாதிக்காது என்ற நிலையில், அதனை ஆளுநர் அவர்கள் சுட்டிக்காட்டி இருப்பது தேவையற்றது.

இவற்றை கருத்தில் கொண்டு, ஆளுநரின் கடிதத்திற்கு உடனடியாக பதில் அனுப்பி வைக்கப்படுகிறது. அதில் அவரின் முந்தைய கடிதத்திற்கு பதில் அளிக்கப்பட்ட விவரத்தையும், இன்றைய கடிதத்திற்கு தெளிவான சட்ட விவரங்களையும் எடுத்துக் கூறி தான் ஏற்கனவே அளித்த பரிந்துரையை ஏற்று அதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

முதல்வர் ஸ்டாலின்

அரசியல் சட்டப்படி பதவிப் பிரமாணம் செய்து கொண்டு, அரசியல் சட்டத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டிய ஆளுநர் இப்படி அரசியல் சட்டத்திற்கு விசுவாசமாக இல்லாமல் இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தும் நடவடிக்கையே தொடர்ந்து ஆளுநர் மேற்கொள்வது வேதனைக்குரியது. கண்டனத்திற்குரியது.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.