சென்னை: பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகி உள்ளன. ஆதிபுருஷ் படத்தை இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.
ஆனால், அதன் சிஜி செம சொதப்பலாக சுட்டி டிவி கார்ட்டூன் போல இருப்பதாக கிண்டல் செய்யப்பட்ட நிலையில், படக்குழுவினர் ஒட்டுமொத்தமாக சிஜி பணிகளை மீண்டும் மேற்கொண்டு 6 மாதம் கழித்து படத்தை வெளியிட்டுள்ளனர்.
படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் ஓம் ராவத் ஆஞ்சநேயருக்கு எல்லா தியேட்டரில் ஒரே ஒரு சீட் ஒதுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த நிலையில், பல திரையரங்குகளில் ஆஞ்சநேயருக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆதிபுருஷ் ரிலீஸ்: அஜய் தேவ்கன், சைஃப் அலி கான், கஜோல் மற்றும் க்ரித்தி சனோன் நடிப்பில் வெளியான தானாஜி படத்தை இயக்கிய இயக்குநர் ஓம் ராவத் தற்போது பிரபாஸ், சைஃப் அலி கான் மற்றும் க்ரித்தி சனோன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி உள்ள ஆதிபுருஷ் படத்தை லைவ் ஆக்ஷன் படமாக உருவாக்கி உள்ளார்.
இந்நிலையில், பல தடைகளை தாண்டி இந்த படம் இன்று பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆன நிலையில், டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
Boom Boom Chav Chav 🤌🤌#AdipurushCelenrations #Prabhas pic.twitter.com/X6ivteQwqj
— 𝖵𝗂𝗃𝖺𝗒𝖺𝗐𝖺𝖽𝖺 𝖯𝗋𝖺𝖻𝗁𝖺𝗌 𝖥𝖢™ (@VJYPrabhasFC) June 16, 2023
தியேட்டர்களில் தீபாவளி: பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடித்த படங்கள் படு தோல்வியை சந்தித்து வந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பாக்ஸ் ஆபிஸை பிரபாஸ் கைப்பற்றப் போகிறார் என்கிற உறுதியான நம்பிக்கையில் ரசிகர்கள் காலையிலேயே தியேட்டர்களுக்கு குடும்பத்துடன் படையெடுத்து சென்றுள்ளனர்.
பெரிய கட்டவுட்களுக்கு பாலாபிஷேகம், மாலை அணிவிப்பது என அத்தனை கொண்டாட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில், தியேட்டர்களில் பட்டாசு வெடித்து தீபாவளியாக படத்தின் ரிலீஸை கொண்டாடி வருகின்றனர்.
ஆஞ்சநேயருக்கு தனி இருக்கை:காவி நிற துணியில் ஆஞ்சநேயர் படம் போட்ட பிரத்யேக இருக்கையை பகவான் ஆஞ்சநேயருக்காக தியேட்டர்களில் ஒதுக்கி உள்ளனர். அதன் போட்டோவை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். அந்த போஸ்ட்டுக்கு கீழ் ஏகப்பட்ட கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.
ஆஞ்சநேயருக்கு மட்டும் ஏன் தனி இருக்கை?: ராமாயண காலத்தில் ராமர், சீதை என அனைவருமே மறைந்து விடுவர். ஆனால், சிரஞ்சீவி என்கிற வரத்தை பெற்றுள்ள ஆஞ்சநேயர் மட்டும் கால காலத்துக்கும் ராமர் பெயரை ஜெபித்துக் கொண்டே அவர் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இந்த பூமியில் இருப்பார் என்கிற நம்பிக்கை உண்டு.
அக்ஷய் குமார் நடித்த ராமர் சேது படத்தில் அக்ஷய் குமாருக்கும் அவரது டீமுக்கும் ராவண அரண்மனைக்கு வழி காட்டுபவராகவே ஆஞ்சநேயர் தான் வருவது போல படம் எடுக்கப்பட்டு இருக்கும். அதன் காரணமாகத்தான் ராம நாமம் ஒலிக்கும் தியேட்டர்களுக்கும் ஆஞ்சநேயர் வருகை தருவார் என்கிற நம்பிக்கையுடன் இப்படி ஒரு ஏற்பாட்டை படக்குழு செய்துள்ளது. இது ஒரு வியாபார யுக்தி என்கிற விமர்சனங்களும் இதுகுறித்த ட்ரோல்களும் சமூக வலைதளத்தில் அதிகம் பரவி வருகின்றன.