அமைதி படையினருக்கு நினைவுச் சுவர்: இந்தியாவின் தீர்மானத்துக்கு ஐ.நா. ஒப்புதல்

நியூயார்க்: ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் ருசிரா காம் போஜ், ஐ.நா. பொதுச் சபை அரங்கில் புதன்கிழமை “ஐ.நா. அமைதிப் படையில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நினைவு சுவர்” என்ற தலைப்பில் வரைவு தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார்.

அதில், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலை மையகத்தில் பொருத்தமான மற்றும் முக்கியமான இடத்தில், ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றி உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்கும் விதத்தில் அவர்களின் பெயர் பொதித்த நினைவுச் சுவரை எழுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சர்வதேச அளவில் அமைதிக்கான முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்கு இந்த சுவர் மிகப்பெரிய சான்றாக திகழும் என்று ருசிரா காம்போ தெரிவித்திருந்தார்.

நினைவு சுவர் எழுப்பும் தீர்மானத்துக்கு, வங்கதேசம், கனடா, சீனா, டென்மார்க், எகிப்து, பிரான்ஸ், இந்தோனேசியா, ஜோர்டான், நேபாளம், ருவாண்டா, அமெரிக்கா உள்ளிட்ட 18 நாடுகளும் ஆதரவு தெரிவித்தன. ஐ.நா. பொதுச் சபை இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு நினைவு சுவர் எழுப்புவதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

நினைவுச் சுவரை கட்டி எழுப்புவது தொடர்பான இந்தியாவின் தீர்மானத்தை ஆதரித்த நாடுகளுக்கு பிரதமர் மோடி நேற்று நன்றி தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “அமைதிக் காக்கும் பணியில் தங்களது இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு புதிய நினைவுச் சுவரை அமைப்பதற்கான தீர்மானம் இந்தியாவால் தாக்கல் செய்யப்பட்டு ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வு. இந்த தீர்மானம் சாதனை அளவாக, 190-இணை ஸ்பான்சர்ஷிப்களை பெற்றுள்ளது. அனைவரின் ஆதரவுக்கும் நன்றி” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வின் அமைதிப்படையில் இந்தியா 3வது பெரிய பங்களிப்பாளராக உள்ளது. மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சைப்ரஸ், காங்கோ ஜனநாயகக் குடியரசு, உள்ளிட்ட நாடுகளில் அமைதியை நிலைநாட்டும் பணியில் 6,000 இந்திய வீரர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.