சென்னை: முக்கியப் பிரமுகர்கள் வருகையின்போதும், பிரதான அரசு நிகழ்வுகளின்போதும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மண்டல மின்சாரப் பொறியாளர்களுக்கும் தமிழ்நாடு மின்சார வாரிய நிர்வாக இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, வேலூர் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் சென்னை வந்தார். அப்போது, தன்னை வரவேற்க காத்திருந்த தொண்டர்களைப் பார்ப்பதற்காக விமான நிலைய வாயில் அருகே காரை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கூறினார். அப்போது மின்தடை ஏற்பட்டது.
எனினும், வாகனத்தில் இருந்து இறங்கிய அமித் ஷா, சிறிது தூரம் நடந்து சென்று, தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். பின்னர், காரில் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்குப் புறப்பட்டார்.
அவர் சென்றவுடன், பாஜகவினர் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். திட்டமிட்டு மின்தடை ஏற்படுத்தப்பட்டதாகக் கூறி, போலீஸாரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர், தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இது பெரிய சர்ச்சையான நிலையில், தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ஒரு முக்கிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த சுற்றறிக்கையில், முக்கியப் பிரமுகர்கள் வருகையின்போதும், பிரதான அரசு நிகழ்வுகளின்போதும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மண்டல மின்சார பொறியாளர்களுக்கும் மின்வாரிய நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள இடங்களைப் பொறியாளர்கள் முன்கூட்டியே ஆய்வு செய்ய வேண்டும். அந்தப் பகுதிகளில் மின் தடை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை மின் தடை ஏற்பட்டால் அதனை உடனே நிவர்த்தி செய்ய மாற்று ஏற்பாடுகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். நிகழ்வு நடைபெறும் இடங்களில் பொறியாளர்கள், மின்சார வாரிய ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும் போன்ற உத்தரவுகள் அந்தச் சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.