செங்கல்பட்டு மாவட்டம் இரும்புலியில், 100 நாள் வேலை திட்டத்திற்கு வேலைக்கு ஆட்களை அனுப்புவதில் முறைகேடு நடப்பதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் போராடிய நிலையில், அதனை படம் எடுக்கச் சென்ற செய்தியாளரை தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவியின் கணவரை சுற்றி வளைத்து மக்கள் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது
இப்படி ஏகத்துக்கும் பீப் சவுண்டு போடுவது போல வயதில் பெரியவரை ஆபாசமாக பேசி அடிக்க பாயும் இவர் தான் இரும்புலி ஊராட்சி மன்ற தலைவர் சூர்யகலாவின் கணவர் மன்மதன்..!
ஊராட்சி மன்ற தலைவரான மனைவியை வீட்டில் அமர வைத்து விட்டு , மன்மதன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டிய அந்த கிராமத்து மக்கள், 100 நாட்கள் வேலை திட்டத்தில் 300 பேர் வரை பெயர் சேர்த்துள்ள நிலையில் வேலை வழங்குவதில் குறிப்பிட்ட சமூக மக்களை அவர் புறக்கணிப்பதாக குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து செய்தி சேகரிக்கச்சென்ற செய்தியாளரிடம், தன்னை எப்படி படம் பிடிக்கலாம் ? எனக்கேட்டு மிரட்டிய மன்மதன், அவரை தாக்கி கேமராவை தட்டி விட்டார்
படம் எடுத்தவரை எப்படி அடிப்பாய் ? என்று தட்டிக்கேட்ட வயதான பெரியவர் ஒருவரை எஸ்.சி.எஸ்.டி கேஸ் கொடுப்பேன் என்று ஆபாசமாக திட்டி மிரட்டினார் மன்மதன்
மன்மதனின் அட்டகாசத்தை கண்டு பொங்கிய அங்கிருந்த மக்கள் ஆவேசமாகி மன்மதனை சுற்றிவளைத்தனர். இதையடுத்து நிலைமை விபரீதமாவதை உணர்ந்து, கையை கட்டிக் கொண்டு பம்மினார் மன்மதன்
வண்டியில் ஏறி கிளம்பும் போது, மீண்டும் பொதுமக்களை ஆபாசமாக பேசியதால், மன்மதனின் வண்டியில் இருந்த சாவியை எடுத்துக் கொண்டு அவரை மக்கள் மடக்கி வாக்குவாதம் செய்தனர், பெண்களும் சூழ்ந்து கொண்டனர்.
ஊராட்சி நிர்வாகி ஒருவர் வண்டி சாவியை வாங்கிக் கொடுத்ததும் , விட்டால் போதும் என்று மன்மதன் அங்கிருந்து கிளம்பிச்சென்றார்
அவருக்கு ஆதரவாக பேசிய பெண்மணியையையும் திட்டி அங்கிருந்து பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். இதற்க்கிடையே செய்தியாளரை தாக்கியதாக மன்மதன் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.