புதுடெல்லி: அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு 6 நாள் பயணமாகச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, ஐநா தலைமையகத்தில் வரும் 21ம் தேதி நடைபெறும் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார்.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் செல்ல இருக்கிறார். வரும் 20ம் தேதி இந்தியாவில் இருந்து புறப்படும் பிரதமர், 21ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார்.
அதன் பிறகு பிரதமர் மோடி, அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் செல்கிறார். வரும் 22ம் தேதி வெள்ளை மாளிகையில் பிரதமருக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. இதனையடுத்து, அதிபர் ஜோ பைடனைச் சந்திக்கும் பிரதமர் மோடி, அவருடன் இரு தரப்பு உறவு தொடர்பாக கலந்துரையாடுகிறார். மேலும், பிரதமர் மோடியை கவுரவிக்கும் விதமாக அன்றைய தினம் அதிபர் ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் அளிக்கும் இரவு விருந்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இதன் தொர்ச்சியாக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதற்கு முன்பும், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றி இருக்கிறார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றும் முதல் வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமையை இதன்மூலம் மோடி பெறுகிறார்.
அமெரிக்க துணை குடியரசுத் தலைவர் கமலா ஹாரிஸ் மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளங்கன் ஆகியோர் இணைந்து அளிக்கும் மதிய விருந்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அந்நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாட இருக்கிறார். இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடி அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை சந்தித்துப் பேச இருக்கிறார்.
வரும் 23-ம் தேதி வரை அமெரிக்காவில் இருக்கும் பிரதமர் மோடி பின்னர் அங்கிருந்து எகிப்து தலைநகர் கெய்ரோ வருகிறார். கடந்த ஜனவரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றவர் எகிப்து அதிபர் அல் சிசி. அப்போது, எகிப்துக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அல் சிசி அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று எகிப்து செல்லும் பிரதமர், அந்நாட்டுடனான இரு தரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பாக அல் சிசி உடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும், எகிப்தின் முக்கிய பிரமுகர்கள், அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.