செந்தில்பாலாஜி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பதற்றப்படக் காரணம் என்ன? – இபிஎஸ் கேள்வி

சென்னை: செந்தில்பாலாஜி விவகாரத்தில் முதல்வர் பதற்றப்பட காரணம் என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்குப் பதில் அளிக்கும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி அதிமுகவின் சமூக வலைத்தளப் பக்கங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில்,”அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு கருத்துகளை தெரிவித்து இருந்தார். இதில் அதிமுக குறித்தும், என்னைப் பற்றியும் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். அது குறித்து மக்களுக்கு முழு உண்மையை தெரிவிக்க வேண்டியது எனது கடமை.

உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றுள்ளது. அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அனுப்பியும் செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை. முதல்வர் வலைதளங்களில் பேசும் போது, பதற்றத்தில் பேசுகிறார். இந்த பதற்றத்துக்கு என்ன காரணம். நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தான் மக்கள் திமுகவுக்கு ஆட்சியைக் கொடுத்தார்கள். ஆனால் மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை. எல்லா வகையிலும் பணம். பணம் ஒன்று தான் குறிக்கோள்.

தமிழகத்தில் திமுகவினர் ரூ.30,000 கோடியை சுரண்டியுள்ளனர். டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் விடப்படவில்லை. 2 ஆண்டுகளாக முறைகேடாக பார்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் தான் வளர்ச்சி பெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. செந்தில்பாலாஜி வழக்கில் நீதிமன்றத்தை நாடி குற்றமற்றவர் என நிரூபிக்கட்டும்.

செந்தில்பாலாஜி அமலாக்கத் துறையிடம் ஏதாவது சொல்லிவிட்டால் தனக்கு பாதிப்பு வந்துவிடுமோ என முதல்வர் அஞ்சுகிறார். முந்தைய ரெய்டுகளின்போது மு.க.ஸ்டாலின் மௌனம் காத்தது ஏன்?. நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் செய்ததாக என் மீது தொடுத்த வழக்குகளை துணிச்சலோடு எதிர்கொண்டு வருகிறேன். எங்களுக்கு பதவி முக்கியமல்ல. அதிமுகவை யார் அழிக்க நினைத்தாலும் அவர்கள் அழிந்து போவார்கள்.” இவ்வாறு அதில் பேசியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.