ஐஸ்வால்: மணிப்பூர் குக்கி இனக்குழுவினர் மீது மைத்தேயி இனக்குழுவினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் மிசோரமில் மைத்தேயி இனமக்கள் அடித்துவிரட்டப்படுவர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களிலும் வன்முறை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூரில் பழங்குடியினர் பட்டியலில் மைத்தேயி இனக்குழு சேர விரும்பினர். இதற்கு மாநில பாஜக அரசு ஆதரவாக இருந்தது. அம்மாநில உயர்நீதிமன்ற உத்தரவும் இதற்கு ஏதுவானதாக இருந்தது. ஆனால் ஏற்கனவே பழங்குடிகள் பட்டியலில் இருக்கும் நாகா, குக்கிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்புதான் மணிப்பூர் 40 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வன்முறை தீயில் வெந்து கொண்டிருக்கக் காரணம்.
இப்போது மணிப்பூரில் குக்கி, மைத்தேயி இரு இனக்குழுக்களுமே ஆயுதம் ஏந்தி தாக்குதல்கல் நடத்தி வருகின்றனர். மைத்தேயி இனக்குழுவை சேர்ந்த ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இந்த வன்முறைகளில் இறங்கிவிட்டனர்.
அதேநேரத்தில் குக்கி இனக்குழுவினர் மிசோரம் மாநில மிசோ பழங்குடிகளுடன் தொப்புள் கொடி உறவானவர்கள். மணிப்பூரில் குக்கி, மிசோரமில் மிசோ, மியான்மர், வங்கதேசத்தின் சின் பழங்குடிகள் என இந்த இனக்குழுவினர் அழைக்கப்படுகின்றனர். இதனால் இயல்பாகவே மணிப்பூர் குக்கி இனமக்களுக்கு மிசோரமின் பெரும்பான்மையினரான மிசோ இனமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது மணிப்பூரில் குக்கி – மைத்தேயி இன மோதல்களில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். இந்த மோதல்களில் குக்கி இனக்குழுவுக்கு மிசோரம் மாநில அரசுதான் ஆயுதங்களை வழங்குகிறது என்பது மைத்தேயி இனக்குழுவின் குற்றச்சாட்டு. அதாவது மணிப்பூரின் குக்கி மக்கள் வாழும் பிரதேசங்களை மிசோரம் தங்களது மாநிலத்துடன் இணைத்து கொள்ள முயற்சிக்கிறது என்கிற பரபரப்பான குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
இதனிடையே மணிப்பூர் விவகாரத்தில் மிசோரம் மாநிலம் பகிரங்கமாகவே தலையிடவும் எச்சரிக்கை செய்யவும் தொடங்கியுள்ளது. மணிப்பூரின் குக்கி இனக்குழுவினர் அமைதியாக வாழ முடியாமல் போனால், மிசோரமில் பல்வேறு காரணங்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் மைத்தேயி இனமக்கள் நிம்மதியாக வாழ முடியாது என எச்சரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மணிப்பூர் குக்கி இனமக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கு மணிப்பூர் மாநில அரசுதான் நெருக்கடி தர வேண்டும்; அப்படி செய்யாவிட்டால் பின்விளைவுகளை மோசமாக எதிர்கொள்ள நேரிடும் எனவும் மிசோரம் குழுக்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன.
மியான்மர் ராணுவ ஆட்சியின் போது பல்லாயிரக்கணக்கான சின் பழங்குடிகள், மிசோரமில் அகதிகளாக தஞ்சமடைந்தனர். மத்திய அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் மத்திய அரசின் தடையை மீறி மியான்மர் அகதிகளுக்கு தஞ்சம் தந்தது மிசோரம் அரசு. அதேபோல வங்கதேச சின் பழங்குடிகளுக்கும் மிசோரம் அரசு அடைக்கலம் தருகிறது. தற்போது மணிப்பூரின் குக்கி பழங்குடிகளுக்கும் அகதிகளாக அடைக்கலம் தந்து கொண்டிருக்கிறது மிசோரம் மாநில அரசு. ஆகையால் மத்தியில் ஆளும் பாஜக அரசு, மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்தி அமைதி முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் பற்றி எரியும் பேராபத்து இருக்கிறது என்கின்றன அம்மாநிலங்களில் இருந்து வெளியாகும் ஊடக செய்திகள்.