புதுடெல்லி: மணிப்பூர் வன்முறை குறித்து உடனடியாக உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும், அது அங்கு நிலவும் களசூழல் குறித்து புரிந்து கொள்ள உதவும் என்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. டெரெக் ஓ பிரையன், கமிட்டியின் தலைவர், பாஜக எம்.பி.,யும், முன்னால் காவல்துறை அதிகாரியுமான பிரிஜ் லாலுக்கு வியாழக்கிழமை (ஜூன் 15) கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் ஓ பிரையன் கூறியிருப்பதாவது: மணிப்பூர் வன்முறை குறித்த தற்போதைய நிலவரத்தை ஆராய்வதற்கும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிப்பது குறித்து விவாதிக்க, உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அவசரக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான அவசரத் தேவையை உங்களின் கவனத்துக்கு கொண்டுவரவே இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன். ஜனநாயகத்தின் பிரதிநிதிகள் என்ற முறையில் இது மிகவும் முக்கியமான ஒரு தேவை.
இதற்கு முன்பு இப்படியான சம்பவம் நிகழ்ந்தது இல்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலை வானளாவ உயர்ந்துள்ளது. ஏடிஎம் வாசல்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். மணிப்பூரில் சமீபத்தில் நடந்த வன்முறைச் சம்பவம், அப்பகுதியில் வாழும் மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் பற்றிய கவலைகளை அதிகரிக்கச் செய்துள்ளது. வன்முறையினால் பலர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் புலம்பெயர்ந்துள்ளனர், கண்டவுடன் சூடுவதற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு மாநிலத்தில் பயத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.
கள நிலவரத்தை அறிந்து கொள்வதும் வன்முறையின் பாதிப்புகளை அளவிடுவதும் அவசியமான ஒன்று. இந்த அடிப்படையில், மணிப்பூரில் தற்போது நடந்து வரும் வன்முறை குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தைக் கூட்டி விவாதிப்பது நிலைமையைப் பற்றி அறிந்து கொள்ள உதவும். மணிப்பூரில் அமைதியைத் திரும்பச் செய்வதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்று நான் நம்புகிறேன்” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் மேதேயி மற்றும் குகி பழங்குடி மக்களுக்கு இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வரும் இனக்கலவரத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் வதந்திகள் பரவுவதைத் தடுப்பதற்காக 11 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையம் தடை செய்யப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் இருக்கும் மேதேயி சமூக மக்களை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் கடந்த மே மாதம் 3-ம் தேதி அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர். இதில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. பின்னர் இது வன்முறையாக மாறி மாநிலம் முழுவதும் பரவி, மணிப்பூர் மாநிலம் முழுவதும் பற்றி எரிகிறது.