புதுவை ஆம்பூர் சாலையிலுள்ள பழைய சட்டக் கல்லூரி வளாகத்தில் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வந்தது. அது பழைமையான கட்டடம் என்பதால், அங்கு மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவியது. அதனால் அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவிகளைக் கடந்த ஆண்டு குருசுகுப்பத்திலுள்ள என்.கே.சி பள்ளிக்கு மாற்றியது கல்வித்துறை. அதையடுத்து அங்கு இரண்டு பள்ளிகளும் ஷிஃப்ட் முறையில் இயங்கி வந்தன. ஆனால் என்.கே.சி பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பள்ளி இயங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் இந்த ஆண்டு சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகள் சவரிராயலு வீதியிலுள்ள திரு.வி.க ஆண்கள் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
திரு.வி.க பள்ளி மாணவர்கள் கந்தப்ப முதலியார் வீதியிலுள்ள வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளிக்கு இடமாற்றம் செய்து, ஷிஃப்ட் முறையில் இயக்க முடிவுசெய்தனர். ஆனால் திரு.வி.க பள்ளி மாணவர்கள் வீரமாமுனிவர் பள்ளிக்குச் செல்ல மறுத்து போராட்டம் நடத்தினர். அதேபோல வீரமாமுனிவர் பள்ளி மாணவர்களும் ஷிஃப்ட் முறையில் பள்ளி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் நேற்று பள்ளி திறந்தபோது சுப்பிரமணிய பாரதியர் பள்ளி மாணவிகள் திரு.வி.க பள்ளிக்குச் சென்றபோது, வகுப்புகள் நடைபெறவில்லை. பள்ளிக்கு விடுமுறை அறிவித்தனர். நேற்று சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகள் திரு.வி.க பள்ளிக்குசச் சென்றனர். அங்கே தி.ரு.வி.க பள்ளி மாணவர்கள் பள்ளியின் கதவைப் பூட்டி, `இது ஆண்கள் பள்ளி, எங்கள் பள்ளி’ எனக் கூறி போராட்டம் நடத்தினர். இதனால் பள்ளிக்கு இடம் இல்லாத நிலைக்கு சுப்பிரமணிய பாரதியர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தள்ளப்பட்டனர். அதையடுத்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் கல்வித்துறை அலுவலகத்தை நோக்கிச் செல்ல முயன்றனர். ஆனால் திடீரென கம்பன் கலையரங்கம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். மாணவிகள் போராட்டம் குறித்து தெரிந்த பல்வேறு சமூக அமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். மாணவிகளை ஊர்வலமாக வெங்கடசுப்பாரெட்டியார் சதுக்கத்துக்கு சமூக அமைப்பினர் அழைத்து வந்தனர்.
இதனிடையே எம்.எல்.ஏ நேரு திரு.வி.க பள்ளிக்குச் சென்று மாணவர்களைச் சமாதானப்படுத்தினார். பின்னர் போராட்டம் நடத்திய இடத்துக்கு வந்த அவர், மாணவிகளைச் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் மாணவிகள் போராட்டத்தைக் கைவிட மறுத்தனர். இதனால் எம்.எல்.ஏ நேரு அங்கிருந்து விலகிச் சென்றார். மாணவிகள் போராட்டத்தால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. புதிய பேருந்து நிலையத்திலிருந்து வந்த வாகனங்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன. புஸ்சி வீதி, அண்ணாசாலை, கடலூர் வழியாக வந்த வாகனங்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் சம்பவ இடத்துக்கு நேரில் வந்தார். அப்போது மாணவிகள், சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். தங்களுக்கு தனியாக பள்ளி வளாகம் வேண்டும், ஷிஃப்ட் முறையில் பள்ளியை நடத்தக் கூடாது எனக் கேட்டனர்.
இதையடுத்து அமைச்சர் நமச்சிவாயம், இரண்டு நாள்கள் அவகாசம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராட்டம் நடந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டம் குறித்து நம்மிடம் பேசிய மாணவிகள், “எங்கள் பள்ளிக் கட்டடம் ஆபத்தான நிலையில் இருந்ததால், வேறு பள்ளிக்கு எங்களை மாற்றினார்கள். ஆனால் அங்குப் படிக்கும் மாணவர்கள், `இது எங்கள் பள்ளி, நீங்கள் வரக் கூடாது’ என்கிறார்கள். பள்ளிக்கூடங்கள் அரசின் சொத்து. மாணவர்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடுக்க வேண்டியதுதான் ஆசிரியர்களின் பணி. ஆனால் இங்கே எங்களைப் போராடச் சொல்லிவிட்டு, கதவை இழுத்து சாத்திக் கொண்டு கையை கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். இதெல்லாம் நியாயமா?
காலை 8:30 மணிக்கு பள்ளிக்கு வந்தோம். ஒரு மணி நேரமாக சாலையில் அமர்ந்திருக்கிறோம். போலீஸார் எங்களை கலைக்கத்தான் பார்க்கிறார்களே தவிர, எங்களுக்குத் தீர்வு சொல்ல யாரும் வரவில்லை. ஒரு வருடமாக `ஷிஃப்ட்… ஷிஃப்ட்’ என்று சொல்லி, அரை நாள் மட்டும் பள்ளி வைத்து எங்களின் படிப்பே போய்விட்டது. இப்போது இருக்கும் கல்விமுறைக்கு வெறும் அரை நாள் மட்டும் பள்ளி இயங்கினால் போதுமா… இதனால் கடந்த பொதுத்தேர்வில் நிறைய மாணவிகள் தோல்வியடைந்திருக்கிறார்கள். நிறைய பேர் அரியர் வைத்திருக்கிறார்கள். இப்படியே ஒவ்வொரு பள்ளியாகச் சென்று நாங்கள் அசிங்கப்பட்டுக் கொண்டிருந்தால், எப்போது படிப்பது… எந்தப் பள்ளியில் படிக்கிறோம் என்பதே எங்களுக்குத் தெரியவில்லை” என்று குமுறினார்கள்.
கல்வித்துறையின் இந்த மெத்தனத்தால் மாணவர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் குதிக்கத் தொடங்கியிருக்கின்றனர். அதேபோல படிக்க இடமின்றி மாணவிகள் அலைக்கழிக்கப்படும் விவகாரம் புதுச்சேரி பெற்றோர் மற்றும் கல்வியாளர்களை கொதிக்க வைத்திருக்கிறது. இந்த நிலையில், இது குறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் கோ.சுகுமாரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இடமாறுதல் பிரச்னையில் பல்வேறு நிர்வாகக் குளறுபடிகள் செய்து, மாணவிகளை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளிய பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின் இணை இயக்குநர் சிவகாமி மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த இரண்டு நாள்களாக புதுவை அரசுப் பள்ளிகளில் நடந்து வரும் பெற்றோர் மாணவர் போராட்டங்கள், அரசுப் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் செயல்பாடுகளைக் கேள்விக் குறியாக்கியிருக்கின்றன.
பழைய சட்டக் கல்லூரிக் கட்டடத்தை ஆய்வுசெய்த புதுவைப் பொறியியல் கல்லூரி வல்லுநர்களும், புதுவைப் பொதுப்பணித் துறை பொறியாளர்களும், அது வலுவிழந்து ஆபத்தான நிலையில் இருக்கிறது என்று கூறிவிட்டனர். அதனால் 500-க்கும் மேற்பட்ட மாணவிகளுடன் அங்கு இயங்கி வந்த சுப்பிரமணிய பாரதியார் மேல்நிலைப் பள்ளியை, 07.09.2022 அன்று குருசுகுப்பம் என்.கே.சி மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்கு மாற்ற அனுமதித்தார் அப்போதைய கல்வித்துறை இயக்குநர். அதையடுத்து 14.09.2022 அன்று அங்கு வந்த இணை இயக்குநர் சிவகாமி, சுமார் 120 மாணவிகள் மட்டுமே படித்து வந்த என்.கே.சி பள்ளியில் தேவைக்கு மேல் பணியாற்றிய ஆசிரியர்கள் சிலரை வாய்மொழி உத்தரவாக வேறு பள்ளிகளுக்கு மாற்றினார்.
ஆனால் அதை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த ஆசிரியர்களில் சிலர், மாணவிகளைப் போராட்டம் நடத்த தூண்டினர். ஆசிரியர்களே கூறியதால் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யக்கூடாது என்றும், மீண்டும் அவர்களை தங்கள் பள்ளிக்கே இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் இறங்கினர் மாணவிகள். அத்துடன் சுப்பிரமணிய பாரதியார் மேல்நிலைப் பள்ளி, தங்கள் பள்ளி வளாகத்துக்கு மாற்றப்படக் கூடாது என்றும் கூறினர். ஆனால் அந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அப்போது எந்த நடவடிக்கையையும் இணை இயக்குநர் சிவகாமி எடுக்கவில்லை. போராட்டம் வலுத்ததால் நான்கு நாள்களுக்குப் பிறகு, சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகளை பழைய இடத்துக்குள் செல்லுங்கள் என்று உத்தரவிட்டார்.
அதனால் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வெய்யிலில் நடந்தே சென்றனர். அதையடுத்து மாணவிகளைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்ற சுப்பிரமணிய பாரதியார் பள்ளியின் துணை முதல்வர் இணை இயக்குநரால் பழிவாங்கப்பட்டதுடன், மாணவிகளை போராடத் தூண்டிய ஆசிரியருக்கு பதவி உயர்வும் தரப்பட்டது. இது ஒருபுறமிருக்க, சுப்பிரமணிய பாரதியார் பள்ளியின் தற்போதைய துணை முதல்வர்தான் மாணவிகளை சாலைமறியல் போராட்டம் செய்யவைத்திருக்கிறார்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்பி அனுப்பும்போது, ஒரு துணை முதல்வரே மாணவிகளை போக்குவரத்து அதிகம் உள்ள இடத்தில் போராட்டம் நடத்த வைத்திருப்பதும், அதை பள்ளிக்கல்வி இயக்குநரகம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததும் வேதனையாக உள்ளது. என்.கே.சி மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி இன்று வரை தொடரும் மாணவர்கள் போராட்டங்கள் அனைத்துக்கும் முழுக் காரணம் பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின் இணை இயக்குநர் சிவகாமிதான். அவர்மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அவரைப் பதவிநீக்கம் செய்யக் கோரி போராட்டம் நடத்துவோம்” என்றார்.