வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டீ சீரீஸ் தயாரிப்பில் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் இன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்று காலை முதலே ரசிகர்கள் பலர் ஆதிபுருஷ் படத்தில் அனுமன் வேடத்தில் நடித்த நடிகரின் நடிப்பைப் பாராட்டி வருகின்றனர். அனுமன் கதாப்பாத்திரமேற்ற நடிகர் குறித்த தகவல்களைப் பார்ப்போம்.
மஹா., மாநிலத்தின் ரைகாட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் நகரில் பிறந்தவர் தேவ் தத்தா நாகே. மராத்தி சீரியல்கள் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தேவ். ஜீ மராத்தி சேனலில் ஒளிபரப்பான ‘ஜை மல்ஹார்’ எனும் தொலைக்காட்சித் தொடரில் இவர் ஏற்ற தேவ் மல்ஹார் கதாபாத்திரம் மும்பை ரசிகர்கள் மத்தியில் முன்னதாக வரவேற்பைப் பெற்றது. ஐந்தடி 10 அங்குல உயரம், கட்டுடல் கொண்ட தேவ், புல்லட் பிரியராவார். தினமும் இவர் தனது புல்லட்டில் ஜிம் சென்று கடின பயிற்சிகளை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டவர்.
ஆஜானுபாகுவான உடல் கொண்ட தேவ், ஓர் ஓவியக் கலைஞர் என்பது பலர் அறியாத் தகவல். இளங்கலை வேதியியல் மற்றும் சட்ட மேற்படிப்பு முடித்த தேவ், நடிப்பை தனது முழுநேரத் தொழிலாக்கிக்கொள்ள தீவிர முயற்சி மேற்கொண்டார். அவ்வப்போது சில இந்தி படங்களில் சிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் தேவுக்கு பெரிய பாத்திரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. பல ஆண்டுகால தொடர் முயற்சி காரணமாக ஆதிபுருஷ் படத்தில் அனுமன் கதாப்பாத்திரம் ஏற்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
அனுமன் கதாபாத்திரத்துக்கு, தேவின் கட்டுடல், அவரை கனக்கச்சிதமாகப் பொருத்தியது. ஆதிபுருஷ் படத்தில் நாயகன் பிரபாஸ் ராமர் வேடமேற்றிருக்க, அனுமன் வேடம் ஏற்ற தேவ் சஞ்சீவி மலையைத் தூக்கிவரும் காட்சி தற்போது திரையரங்குகளில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரபாஸை அடுத்து ஆதிபுருஷ் படத்தில் அனுமன் கதாபாத்திரமேற்ற தேவ், ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுவருகிறார். தேவ் குறித்த தகவல்களை தற்போது இணையத்தில் பலர் தேடிவருவது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement