மும்பையில் பருவமழை எப்போது தொடங்குகிறது? IMD சொன்ன குட் நியூஸ்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. குறிப்பாக தென் தீபகற்ப பகுதிகள், கிழக்கு இந்தியா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் லேசானது முதல் பரவலானது வரை மழை பெய்து வருகிறது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் பருவமழைக்கான நேரம் வந்துவிட்டது. வழக்கமாக ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் பருவமழை தொடங்கும்.

பருவமழை தொடக்கம்

நடப்பாண்டை பொறுத்தவரை ஜூன் 18 முதல் 22க்குள் பருவமழை தொடங்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வழக்கத்தை விட ஒருவார காலம் தாமதம் என்கின்றனர். பருவமழை தொடர்பாக புனே வானிலை ஆய்வு மையத் தலைவர் அனுபம் காஷ்யாபி கூறுகையில், அரபிக்கடலில் மகாராஷ்டிரா முதல் கேரளா வரையிலான கடலோரப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காணப்படுகிறது.

மும்பையில் மழை

இது வரக்கூடிய நாட்களில் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழல் மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தொடக்கத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் புனே, மும்பை ஆகிய நகரங்களில் பருவமழை தொடங்கிவிடும். அதுவே விதர்பா, வடக்கு மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் தாமதம் ஆகும் எனத் தெரிவித்தார்.

வறண்ட வானிலை

இதேபோல் தனியார் வானிலை ஆய்வாளர் அக்‌ஷய் தியோரஸ் கூறுகையில், ஜூன் 22ஆம் தேதிக்கு முன்னதாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. அதுவரை வறண்ட மற்றும் வெப்பம் நிறைந்த வானிலையே காணப்படும். குறிப்பாக கொங்கன் மற்றும் மும்பையை ஒட்டியுள்ள பகுதிகள் வறட்சியாக இருக்கும்.

ஜூன் கடைசி வாரத்தில்

ஜூன் 23ஆம் தேதிக்கு பின்னர் சாதகமான சூழல் ஏற்படும். பருவமழை படிப்படியாக உச்சம் நோக்கி செல்லும். அதேசமயம் மகாராஷ்டிர மாநிலத்தின் உட்பகுதிகளை எடுத்துக் கொண்டால் ஜூன் கடைசி வாரம் அல்லது ஜூலை முதல் வாரத்தில் பருவமழை தொடங்கும் எனக் கூறினார். கேரள மாநிலத்தை பொறுத்தவரை வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி தான் பருவமழை தொடங்கும். ஆனால் நடப்பண்டில் ஜூன் 8ஆம் தேதி தொடங்கியது.

கேரளாவில் கடல் கொந்தளிப்பு

இதற்கிடையில் பிபோர்ஜாய் புயலின் தாக்கம் காரணமாக மழை வெளுத்து வாங்கியது. இது நேற்றைய தினம் பாகிஸ்தானில் கரையை கடந்தது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் வரும் 18ஆம் தேதிக்கு பின்னர் மேலும் அதிகரிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக கேரள மாநிலத்தின் கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படும். எனவே மீனவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை ஆய்வாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.