சென்னை:
“திமுக எம்.பி. கனிமொழி கைது செய்யப்பட்ட போது இவ்வளவு துடிக்காத
, செந்தில் பாலாஜி கைதானதற்கு இப்படி துடிப்பது ஏன்?” என்று அதிமுக பொதுச் செயலாளர்
கேள்வியெழுப்பிய நிலையில், அதுகுறித்து ஆர்.எஸ். பாரதி விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை மேற்கொண்ட கைது நடவடிக்கையால் திமுகவினர் கொதித்து போயுள்ளனர். குறிப்பாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் மிகுந்த கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த கோபம் அவர் வெளியிட்ட வீடியோவில் நன்றாக தெரிந்தது. “திமுககாரனை சீண்டி பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். அடிச்சா திருப்பி அடிக்கிற மாதிரிதான் ஒவ்வொரு திமுககாரனையும் நாங்கள் வளர்த்திருக்கிறோம். உங்கள் மிரட்டலுக்கு பயந்து பணிந்து செல்ல நாங்கள் அடிமைக் கட்சி அதிமுக அல்ல” என மு.க. ஸ்டாலின் அந்த வீடியோவில் கூறியிருந்தார்.
முன்னதாக, செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டிருந்த ஓமந்தூரார் மருத்துவமனைக்கும் முதல்வர் ஸ்டாலின் சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். அதேபோல, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலின் மருமகன் சபரீசன் உள்ளிடோரும் செந்தில் பாலாஜியை சந்தித்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலினை கடுமையாக தாக்கி பேசினார். மேலும், உடன்பிறந்த சகோதரி கனிமொழி கைது செய்யப்பட்ட போது கூட இவ்வளவு துடிக்காத ஸ்டாலின், செந்தில் பாலாஜி கைதானதற்கு இப்படி துடிப்பது ஏன்? என கேள்வியெழுப்பி இருந்தார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் விதமாக ஆர்.எஸ். பாரதி கூறியதாவது:
தங்கள் தலைவி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது, 1.5 கோடி ரூபாய்க்கு இட்லி, தோசை சாப்பிட்டார் எனக் கூறிய கும்பல்தானே அதிமுக. அவர்கள் திமுகவை பற்றி பேசலாமா? திமுகவின் அடிமட்ட தொண்டன் என்றால் கூட அவனுக்காக பதறி அடித்து ஓடி வருபவரே எங்கள் தளபதி மு.க. ஸ்டாலின். திமுககாரர்கள் யாருக்கு ஏதாவது ஒன்று என்றாலும் ஸ்டாலின் மருத்துவமனையில் வந்து பார்ப்பார். அப்படிதான் செந்தில் பாலாஜியையும் வந்து பார்த்தார். ஆனால், அதை கூட கொச்சைப்படுத்தி பேசுவது அதிமுகவின் புத்தி.
அமலாக்கத்துறை 18 மணிநேர விசாரணையின் போது செய்த சித்ரவதை காரணமாகவே செந்தில் பாலாஜி உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட அமலாக்கத்துறையே காரணம். இதுதான் உண்மை.
ஆ. ராசா கைது செய்யப்பட்ட போது ஸ்டாலின் என்ன செய்தார் என எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார். ஆ. ராசா கைதை கண்டித்து திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அவருக்கு தெரியாது போலிருக்கிறது. அதேபோல, கனிமொழி கைது செய்யப்பட்ட போது, அவரை ஸ்டாலின் பார்க்கவில்லையே என எடப்பாடி கூறியிரு்ககிறார். கனிமொழி திகார் சிறையில் இருந்த போது, 2011-ம் ஆம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி மாலை 4 மணிக்கு அவரை மு.க. ஸ்டாலின் சந்தித்தார். வரலாறு தெரியாமல் பேசுவதை எடப்பாடி பழனிசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஆர்.எஸ். பாரதி கூறினார்.