முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் பீகாரில், ஆளும் மகாபந்தன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் ராமாயணம் குறித்துப் பேசியிருப்பது பா.ஜ.க-வினரிடையே கடும் எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது. முன்னதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ ரிட்லால் யாதவ், “ராமாயணம் மசூதியில் அமர்ந்து எழுதப்பட்டதுதான். அப்போது இந்துத்துவா ஆபத்தில் இல்லையா… சரி அப்படியென்றால், உங்கள் கட்சியிலிருந்து (பா.ஜ.க) அனைத்து முஸ்லிம்களையும் வெளியேற்றுங்கள்.
இந்தியாவில் 11 வயது முஸ்லிம் சிறுமி பகவத்கீதையை வாசித்து பதக்கம் வென்றபோது மக்கள் அனைவருமே பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு முஸ்லிம் சிறுமி பகவத்கீதையைப் பிரசாரம் செய்தார் என்று பா.ஜ.க ஏன் அப்போது கூறவில்லை” என்று கேள்வியெழுப்பினார். ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ-வின் இத்தகைய பேச்சு, பா.ஜ.க தரப்பிலிருந்து எதிர்ப்பை வரவழைத்திருக்கிறது.
இதனால் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தையும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியையும் ஒரே நேரத்தில் சாடிய பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரேம் ரஞ்சன் படேல், “உலகின் மிகப் பழைமையான மதம் சனாதன தர்மம் . அதன் கலாசாரம் உலகளவில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.
அத்தகைய மதத்துக்கு எதிராகப் பேசுவது அறியாமையின் அறிகுறியாகும். ராமாயணம் பற்றிப் பேசுபவர்களுக்கு அறிவு தேவை” என்று விமர்சித்தார்.
இதற்கிடையில் பீகார் கல்வியமைச்சர் சந்திரசேகர், “ராமாயணம் என்பது வெறுப்புணர்வைப் பரப்பி சமூகத்தைச் சீர்குலைக்கும் ஒரு புத்தகம்” என்று கூறியிருந்தார்.