கிளாம்பாக்கம்.. அதிரடியாக இறங்கும் புதிய பேருந்துகள்.. ரூ.500 கோடியில் தமிழக அரசு ப்ளான்!

சென்னை:
கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைவதை கருத்தில்கொண்டும், தமிழகம் முழுவதும் உள்ள மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் ரூ.500 கோடிக்கு 1000 புத்தம் புதிய பேருந்துகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல, பழுதடைந்து இருக்கும் 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் மக்கள்தொகை அபரிமிதமாக பெருகியுள்ளது. குறிப்பாக, சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய மாநகரங்களில் மக்கள் நெருக்கடி அதிகரித்துள்ளது.

மக்கள்தொகை பெருக பெருக, பொது போக்குவரத்துகளான ரயில், பேருந்துகளுக்கும் தேவை அதிகரித்திருக்கிறது. முக்கியமாக, பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்தே ஆக வேண்டிய கட்டாயம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

முன்பெல்லாம் பண்டிகை நாட்களில்தான் வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளில் சீட் கிடைக்தாத நிலை ஏற்படும். ஆனால், தற்போது சாதாரண நாட்களில் கூட வெளியூர்களுக்கு பேருந்துகள் கிடைப்பது குதிரைக் கொம்பாக மாறியுள்ளது. குறிப்பாக, சென்னையில் வார இறுதியிலும், பண்டிகை நாட்களிலும் வெளியூர்களுக்கு செல்ல பேருந்து கிடைப்பது என்பது அரிதிலும் அரிதாக மாறிவிட்டது. இதனால் மக்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது.

இந்நிலையில், மக்களின் இந்த கஷ்டத்தை புரிந்து கொண்ட தமிழக அரசு, புதிதாக 1000 பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.500 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. மேலும், இந்த நிதியில் பழுதடைந்துள்ள பேருந்துகளும் டக்கராக புதுப்பிக்கப்படவுள்ளன. விழுப்புரம் கோட்டத்தில் 190 பேருந்துகள், கோவை கோட்டத்தில் 163 பேருந்துகள், மதுரை கோட்டத்தில் 163 பேருந்துகள், திருநெல்வேலி கோட்டத்தில் 129 பேருந்துகள், கும்பகோணம் கோட்டத்தில் 155 பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் 200 எஸ்இடிசி (SETC) விரைவுப் பேருந்துகளும் வாங்கப்படவுள்ளன. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைவதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் தேவைப்படும். இதற்காகவே எஸ்இடிசி பேருந்துகள் வாங்கப்படவுள்ளன. அதுமட்டுமல்லாமல், பண்டிகை காலங்களில் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அந்த சமயங்களில், தற்போது பல்வேறு மாவட்டங்களுக்கு வாங்கப்படும் பேருந்துகளை சிறப்பு பேருந்துகளாக பயன்படுத்திக் கொள்ள முடியும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.