சென்னை:
நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், பாமக தலைவர்
இதுதொடர்பாக முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய் அரசியல் பிரவேசத்துக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அன்புமணி ராமதாஸின் இந்த வலியுறுத்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நடிகர் விஜய் நடிப்பிலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் வெளியாகவுள்ள திரைப்படம் லியோ. ஏற்கனவே மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்த கிளாசிக் ஹிட்டுகளை லோகேஷ் கொடுத்திருப்பதால் இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, நடிகர் விஜய் அரசியலில் குதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன. அவரது அடுத்தடுத்த நகர்வுகளும் அதை உறுதிப்படுத்தவதாகவே உள்ளன.
விஜய் அரசியல் களத்துக்கு வந்தால் எப்படிப்பட்ட தாக்கம் இருக்கும் என பல அரசியல் கட்சிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றன.
இந்த சூழலில், பாமக தலைர் அன்புமணி ராமதாஸ், லியோ திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு ஒரு முக்கிய அறிவுரையை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம்பெற்றிருப்பது வருத்தம் அளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதை பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது.
புகைப்பழக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு. சட்டமும் அதைதான் சொல்கிறது. எனவே நடிகர் விஜய் கடந்த 2007, 2012-ம் ஆண்டுகளில் உறுதியளித்ததை போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.