புதுடெல்லி: கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தியுள்ளார்.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் சீன ராணுவம் அடிக்கடி அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. இதன்காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.
இதில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 38 பேர் உயிரிழந்தனர். ஆனால் 4 பேர் மட்டுமே உயிரிழந்ததாக சீன அரசு கூறி வருகிறது.
இந்த சூழலில் கல்வான் பள்ளத்தாக்கு மோதலின் 3-வது ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “கல்வான் பள்ளத்தாக்கில் நமது நாட்டை பாதுகாக்க வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர்களது துணிச்சல், வீரம், தியாகம் எதிர்கால தலைமுறையினருக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இன்றளவும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அங்கு 50,000 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கல்வான் மோதல் நினைவு தினத்தையொட்டி ராணுவ உயரதிகாரிகளின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் லடாக்கின் லே நகரில் நேற்று நடைபெற்றது. அப்போது சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.