Vijay: நான் ரெடி.. விஜய் பிறந்தநாளில் கலக்கலாக வெளியாகும் லியோ முதல் சிங்கிள்!

சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் படம் லியோ.

இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இன்னும் சில தினங்களில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி படத்தின் சூப்பர் அப்டேட் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் பிறந்தநாளில் வெளியாகும் லியோ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் லியோ. மாஸ்டர் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் விஜய் -லோகேஷ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. மாஸ்டர் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தற்போது லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படம் வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் 67வது படமாக உருவாகியுள்ள லியோ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்ய மற்றொரு காரணமும் உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முன்னதாக கமல் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான விக்ரம் படம் இன்டஸ்ட்ரியல் ஹிட்டான நிலையில், தற்போது லியோ படம் அதே போன்றதொரு வசூல் மழையை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் முதல் முறையாக விஜய் கேங்ஸ்டர் வேடத்தில் நடித்துள்ளதும் படத்தின் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தப் படத்தில் 14 ஆண்டுகளை கடந்து தற்போது த்ரிஷாவுடன் விஜய் ஜோடி சேர்ந்துள்ளார். படத்தின் அடுத்தடுத்த வீடியோக்கள், போஸ்டர்கள், புகைப்படங்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களை எப்போதும் த்ரில்லிங்காகவே வைத்திருக்கிறது. இந்நிலையில் வரும் 22ம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் படக்குழு தரப்பில் இது உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் முன்னதாக ரெடியா என்று லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தக் கேள்விக்கு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பதிலளித்த நிலையில், சில நிமிடங்களிலேயே நடிகர் விஜய்யின் போஸ்டருடன் இதற்கான விடை கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி வரும் 22ம் தேதி லியோ படத்தின் முதல் சிங்கிள் ரிலீசாகவுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் விஜய்யும் பகிர்ந்துள்ளார். இதையொட்டி ஒரு போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விஜய் சிகரெட் பிடித்தபடி மிகவும் ஆக்ரோஷமாக காணப்படுகிறார். விஜய் இந்தப் படத்தில் வயதான கேங்ஸ்டர் ரோலில் நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், இதில் இளவயது விஜய்யை பார்க்க முடிகிறது. மிகவும் ஸ்டைல் லுக்கில் அவர் காணப்படுகிறார்.

விஜய் பிறந்தநாளையொட்டி படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படத்தின் இசை வெளியீடு குறித்த அப்டேட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.