சென்னை:
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருப்பார் என தமிழக அரசு அதிரடியாக அரசாணை பிறப்பித்துள்ளது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, அமைச்சர் முத்ததுசாமிக்கும் பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டது.
இதையடுத்து, இதுதொடர்பான பரிந்துரைகளை தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த பரிந்துரையை ஏற்க மறுத்த ஆளுநர், சில விளக்கங்களை கேட்டு தமிழக அரசுக்கே அதை திருப்பி அனுப்பினார். அதாவது, முதல்வர் தெரிவித்துள்ள காரணங்கள் தவறாக இருப்பதாக குறிப்பிட்டு ஆளுநர் அதை திருப்பி அனுப்பினார். ஆளுநரின் இந்த செயல், ஏற்கனவே தகித்துக் கொண்டிருக்கும் தமிழக அரசியல் களத்தில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், அரசின் இந்த பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று மாலை திடீரென ஒப்புதல் வழங்கினார். அதே சமயத்தில், குற்ற வழக்குகளை சந்தித்து வருபவரும், நீதிமன்றக் காவலில் இருப்பவருமான செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்வதை ஏற்க முடியாது எனவும் ஆளுநர் தெரிவித்திருந்தார்.
ஆளுநரின் இந்தக் கருத்து பெரும் விவாதத்தை கிளப்பிய நிலையில், தமிழக அரசு சார்பில் இன்று இரவு அரசாணை வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், “அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பில் இருந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகியவை அவரது உடல் நிலையின் காரணமாக அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமிக்கு பிரித்து வழங்கி இன்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. செந்தில் பாலாஜி அவர்கள் இலாகா இல்லாத (Minister without portfolio)அமைச்சராகத் தொடரவும் ஆணையிடப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.