சாதிச்சான்றிதழ் வழங்க மறுத்த கோட்டாட்சியர் – அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியைச் சேர்ந்த வெயில் செல்வி என்பவர் தனது மகளுக்கு காட்டுநாயக்கர் சாதி என்பதற்கான சான்றிதழ் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்குச் சாதிச்சான்றிதழ் வழங்காமல் கால தாமதம் செய்துள்ளனர்.
இதையடுத்து வெயில் செல்வி இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கெளரி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு, விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் வெயில் செல்வி தரப்பில், “தனது மகளுக்கு காட்டுநாயக்கர் சாதிக்கான சான்று வழங்க கோரி விண்ணப்பித்ததாகவும், அதற்கு அதிகாரிகள் தரப்பில் உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறி நிராகரித்து விட்டதாகவும், மேலும், உரிய ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் சாதிச்சான்று கோரி விண்ணப்பித்தும் அதனை தராமல் அலைக்கழிப்பதாகவும் தெரிவித்தனர்.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கான சாதிச்சான்றிதழ்கள் குறித்த வழிகாட்டல்களை 1994-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தி தந்திருக்கும் நிலையில் முப்பது ஆண்டுகளுக்கு பின்னரும் அதற்கான சட்ட விதிமுறைகளை ஏன் உருவாக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினர்.
இந்தக் கேள்விக்கு ஜூலை மாத இறுதிக்குள் உரிய வழிமுறைகள் உருவாக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் ஆன்லைனில் சாதிச்சான்று கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு முப்பது நாட்களுக்குள் சான்றிதழை வழங்க வேண்டும் என்றும், சாதிச்சான்றிதழ் கோரி விண்ணபித்தவருக்கு அதனை தராமல் அலைக்கழித்தற்காக கடையநல்லூர் வருவாய் கோட்டாட்சியருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர்.