சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், அவரை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஓரிரு தினங்களில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக, ஓமந்தூரார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி இருந்த போது, அவரை ஜூன் 28-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை மாவட்டமுதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அனுமதி கொடுத்தார்.
இந்நிலையில், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் பல வாதங்களை முன்வைத்தார். “இன்னும் சில தினங்களில் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. இந்த நேரத்தில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் உடல்நிலை மேலும் பாதிக்கப்படும். உடல்நிலையை கருத்தில்கொண்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிட்டார்.
ஆனால், அமலாக்கத்துறை தரப்பில் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், வரும் 23-ம் தேதி வரை 8 நாட்கள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். அதே சமயத்தில், மருத்துவமனையில் வைத்தே விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.