சென்னை: சரத்குமார், அசோக் செல்வன் நடித்த போர் தொழில் திரைப்படம் ஒரே வாரத்தில் பல கோடியை வசூலித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இருவரது வித்தியாசமான கூட்டணியில் க்ரைம் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார்.
போர் தொழில்: அப்ளாஸ் என்டர் டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தின் டிரைலர் வெளியான போதே படத்தின் மீது எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது. மத்தியில் கிரைம் த்ரில்லர் படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் போர் தொழில் க்ரைம் திரில்லர் ஜானரில் இருந்ததால், இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
தொடர் கொலை: திருச்சியில் இளம் பெண்கள் வித்தியாசமான முறையில் தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்கள். இந்த வழக்கு சிபிசிஐடி அதிகாரிகள் வசம் கொண்டு செல்லப்படுகிறது. சரத்குமார் தலைமையில் நடைபெறும் இந்த வழக்கு விசாரணையில் அவருக்கு உதவியாக அசோக் செல்வன் பணி அமர்த்தப்படுகிறார். இந்த வழக்கை இவர்கள் எப்படி விசாரிக்கிறார்கள்? குற்றவாளிகளை கண்டுபிடித்தார்களா? கொலைகளுக்கான காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வது தான் போர் தொழில் திரைப்படத்தின் கதை
பல கோடி வசூல்: வழக்கமாக நடிப்பில் பட்டையை கிளப்பும் சரத்குமார் வழக்கம் போல நடிப்பில் கலக்கி இருக்கிறார். அசோக் செல்வன் தனது இயல்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார். காதல், பாடல், பைட் எதுவும் இல்லாமல் கதைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர். கடந்த வாரம் திரையரங்கில் வெளியான இத்திரைப்படம், ஒரே வாரத்தில், உலக அளவில் ரூ.12.30 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுமையான கதை: இந்தப்படத்தின் வெற்றி பற்றி இயக்குநர் விக்னேஷ் ராஜாவிடம் கேட்டபோது, போர் தொழில் படம் சிறந்த படமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், இப்படியொரு வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கவில்லை. மீடியாகளும் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தின் வெற்றி எனக்கு கூடுதல் பொறுப்பை கொடுத்திருக்கிறது. அடுத்தும் த்ரில்லர் படத்தை இயக்க இருக்கிறேன். அதுவும் புதுமையான கதையாக இருக்கும் என்றார்.